Lifestyle and human interest
மன உளைச்சலில் திருமணம் ஆகாத ஆண்கள்!
“நீங்க சொல்றது சரிதான் வித்யாக்கா. கரை களை ஒட்டி பில்டிங்குகளா இருக்கு. ஆற்றுல வெள்ளம் வரும்போது ஓடறதுக்கு வழியில்ல

வினுவும் விமலும் வித்யாவின் வீட்டுக்குள் சென்றபோது, நேபாளத்தில் நிகழ்ந்த பெருவெள்ளத்தின் காட்சிகளை பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தார் வித்யா.
“ரொம்ப ரொம்ப மோசமான பெருவெள்ளம். இப்படி ஒரு காட்சியை சினிமாலகூடப் பார்த்திருக்க மாட்டோம்” என்றாள் வினு.
“ஒரு சில நிமிடங்கள்ல எல்லாத்தையும் வாரிச் சுருட்டிக்கிட்டுப் போயிருச்சு. எத்தனை உயிர்கள்… எத்தனை கட்டடங்கள்… பாலங்கள்… சாலைகள்… நீர்மின் நிலையங்கள்னு எவ்வளவு இழப்பு” என்றாள் விமல்.
“எதனால இப்படித் திடீர் வெள்ளம் ஏற்பட்டுச்சாம் விமல்?”
“இமயமலைகள்ல உள்ள பனிப்பாறை உடைஞ்சு ஆற்றுல விழுந்ததால ஏற்பட்ட திடீர் வெள்ளமாம் வித்யாக்கா.”
“ஓ, இதைத்தான் `க்ளேசியர் கொலாப்ஸ்'னு சொல்றாங்களா... இதைப் பத்தி முன்கூட்டியே கணிக்க முடியலையா?”
“வானிலை முன்னறிவிப்பு, நிலநடுக்கம் எல்லாம் முன்கூட்டியே கண்டறிய வாய்ப்பு இருக்கு வினு... ஆனா, பனிப்பாறை திடீர்னு சரிஞ்சு விழறதை அப்படிக் கணிச்சு சொல்ல முடியாதுல்ல...”
“ஆமா, இயற்கையோட கோர தாண்டவம் ஒரு பக்கம்னாலும் இன்னொரு பக்கம் அரசாங்கம், மக்களோட பேராசையும் காரணம். ஆறு ஓடற பகுதிகள்ல மிக நெருக்கமா அடுக்கு மாடிகளைக் கட்டறது, பாலம், மின் திட்டம் மாதிரியான செயல்பாடுகளை நிகழ்த்தறதுன்னு இதுல பல காரணங்கள் இருக்கு.”
“நீங்க சொல்றது சரிதான் வித்யாக்கா. கரை களை ஒட்டி பில்டிங்குகளா இருக்கு. ஆற்றுல வெள்ளம் வரும்போது ஓடறதுக்கு வழியில்ல. அதுவும் இப்படி ஒரு பெருவெள்ளம் வரும்போது வழியில்லாம கரைகளைத் தாண்டி, மக்களோட வசிப்பிடங்களுக்குள்ளேயும் நுழைஞ்சு, பேரழிவை ஏற்படுத்திடுது.”
“ஆறுகள், காடுகள் மாதிரியான இடங்கள்ல இருந்து குறிப்பிட்ட தூரத்துக்கு மனிதர்கள் வசிப்பிடங்களை அனுமதிக்கக் கூடாது. அப்படி இருந்திருந்தா இவ்வளவு பெரிய சேதமும் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது.”
“ஆயிரத்துக்கும் மேல உயிரிழந்திருக்காங்க. நாலாயிரத்துக்கும் மேற்பட்டவங்களைக் காணலை. இறந்த உடல்களை மீட்குறதுலயும் சிக்கல்.”
“கஷ்டமா இருக்கு விமல்... இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இடம் நேபாளம்ங்கிறதால சுற்றுலாவுக்கு வந்த பயணிகள் அதிகம் உயிரிழந்திருக்காங்க பாவம்.”
“நேபாளத்தோட நுவாகோட் பகுதியில இருந்த ஒரு பள்ளி முதல்வர் ராஜேந்திர தவாடிக்கு வெள்ளம் குறித்துத் தகவல் கிடைச்சவுடனே, 900 மாணவர்களையும் பக்கத்துல இருந்த மேடான இடத்துக்கு அழைச்சிட்டுப் போயிட்டாரு. பத்து நிமிஷத்துல வெள்ளம் வந்து பள்ளியே காணாமப் போயிருச்சு. ராஜேந்திர தவாடிக்குப் பலரும் பாராட்டுகளைச் சொல்லிட்டுஇருக்காங்க.”
“ஓ, சீக்கிரமா நேபாளம் மீளட்டும். இனியாவது பாடத்தைக் கத்துக்கட்டும்.”
“ஆமா வினு. மத்தியப் பிரதேசத்துல கல்பனா மிஸ்ரா டெலிவரிக்காக அரசு சஞ்சய் காந்தி ஹாஸ்பிட்டல்ல சேர்க்கப்பட்டாங்க. அங்கே அவங்களுக்குக் கொடுக்கப் பட்ட ட்ரீட் மென்ட்ல திருப்தி இல்லாததாலயும் அலட்சியம் காட்டப்பட்டதாலயும் ‘என்னையும் குழந்தையையும் கொல்லப் பார்க்கறாங்க. என்னை வேற ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப் போங்க’ன்னு கதறுனாங்க. ஆனா, அவங்களைக் கட்டாயப்படுத்தி, சிசேரி யன் பண்ணிருக்காங்க. கொஞ்ச நேரத்துலேயே கல்பனாவும் குழந்தையும் அவங்க பயந்த மாதிரியே இறந்துட்டாங்க. ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.”
“ஆமா, நான்கூட அந்த வீடியோவைப் பார்த்தேன் வித்யாக்கா. ஆனா, இதுக்கு ஹாஸ்பிட்டல் தரப்புலேருந்து கல்பனாவுக்கு ஏதோ பிரச்னை இருந்ததாகவும் பயத்தால இப்படி நிகழ்ந்திருச்சுன்னும் சொல்றாங்க. பிரசவம் பார்த்த டாக்டர்ஸும் நர்ஸ்களும் சஸ்பெண்ட் பண்ணப்பட்டிருக்காங்க. உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு போட்டிருக்காங்க.”
“ரொம்ப வருத்தமா இருக்கு... உசிலம்பட்டில பதினாறு வயசு சிறுமி தற்கொலை செஞ்சிக் கிட்டாங்க கேள்விப்பட்டீங்களா…”
“எதுக்குப்பா, நீட் பிராப்ளமா?”
“இல்ல வித்யாக்கா. அந்தப் பொண்ணு டென்த்ல நல்ல மார்க்ஸ் எடுத்திருக்காங்க. ஒரு கவர்ன்மென்ட் ஸ்கூல்ல அவங்களுக்குப் பிடிச்ச கோர்ஸ் கிடைக்கல. அதனால வேற ஸ்கூல்ல அட்மிஷனுக்குப் போயிருக்காங்க. அப்போ ஹெச்எம் நிமிர்ந்தே பார்க்கலையாம். பொண் ணோட அம்மா கைகூப்பி சீட் வேணும்னு கேட்டிருக்காங்க. அந்தக் கைகளைப் பொண்ணு இறக்கச் சொல்லித் தட்டி விட்டிருக்காங்க. அதை ஹெச்எம் பார்த்துட்டாங்க. உடனே டென்ஷனான ஹெச்எம், சாதியைக் குறிப்பிட்டு, ‘நீங்க எல்லாம் கைகட்டிதான் நிக்கணும்’னு சொல்லியிருக்காங்க. அந்தப் பொண்ணும் அம்மாவும் மன வருத்தத்தோட வீட்டுக்கு வந்திருக்காங்க. மறுநாள் அந்தப் பொண்ணு தற்கொலை செஞ்சிக்கிட்டாங்க.”
“அடக் கொடுமையே… ஒரு தலைமையாசிரியரே இப்படி நடந்துக்கிட்டா என்னதான் செய்யறது?”
“இப்போ அவங்க மேல வன்கொடுமை சட்டத்தின் கீழ வழக்குப் பதியப்பட்டிருக்கு. சட்டப்படி நடவடிக்கை எடுத்தாதான் இன்னொருத்தங்க தப்பு செய்ய யோசிப்பாங்க.”
“ம்… இதைக் கேளுங்க. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவங்க லியா ஸ்டூவர்ட். இவங்க ஜூன் மாசம் கூகி பீச்ல ஸ்விம் பண்ணிட்டிருந்தப்ப 4 மீட்டர் நீளமுள்ள சுறா ஒண்ணு இவங்களைத் தாக்க ஆரம்பிச்சிருச்சு. ‘என் ஒரு வயசுக் குழந்தைக்கு அம்மா இல்லாம போயிடப் போகுது... இனி என் வாழ்க்கை அவ்வளவுதான்’னு நினைச்சிருக்காங்க லியா. ஆனாலும், தன்னால முடிஞ்சவரை சுறாவைக் குத்தியிருக்காங்க. ஒருகட்டத்துல அது லியாவை விட்டுட்டுப் போயிருச்சு. ஆனா, லியாவுக்கு ஒரு கையோட முன்பகுதியும் கால் தொடையும் காணாமப் போயிருச்சு. உடனே அவங்களை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க. ஏகப்பட்ட ஆபரேஷன் செஞ்சிருக்காங்க. பத்து நாள்களுக்குப் பிறகு லியா கண் விழிச்சிருக்காங்க. ‘சுறா தாக்குதல் கொடுமையானது. ஒரு கை இல்லாட்டாலும் உயிரோட இருக்கேனே, அதுவே போதும்’னு சொல்லியிருக்காங்க லியா.”
“அவங்க சொல்றதும் சரிதான் வினு... உயிர்தான் முக்கியம்.”
“மகாராஷ்டிர மாநிலத்தோட ஜல்கான் மாவட்டத்துல 383 ஆண்கள் கடந்த 6 மாதங்கள்ல தற்கொலை செஞ்சிக்கிட்டாங்க. இதுக்கு முக்கியமான காரணமா ‘கல்யாணம் ஆகலைங் கிற மன உளைச்சல்’னு சொல்றாங்க. குறிப்பிட்ட வயசுல கல்யாணம் ஆகணும்னு சமூகம் திட்டமிட்டு வச்சிருக்கு. அந்த வயசுக்கு மேல கல்யாணம் ஆகலைன்னா மனம் உடைஞ்சு போயிடறாங்க. அதோட குடி, போதைன்னு பல பழக்கங்கள்… அப்புறம் எப்படிப் பொண்ணு கிடைக்கும்? ஆனா, உயிரிழந்த ஆண்களோட குடும்பம் ‘பெண்களோட எதிர்பார்ப்பு அதிகமானதும் ஒரு காரணம்’னு சொல்றாங்க.”
“பாவம்… இதுக்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கணும். ஆண்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கணும் விமல்.”
“ம்… கீர்த்தி சனோன் நடிச்ச ஒரு விளம்பரத்துல அவங்க போட்டிருந்த டிரஸ் பத்தி சர்ச்சையாச்சு. பலரும் திட்டித் தீர்த்துட்டாங்க. கங்கனா ரனாவத்தும் தன் பங்குக்கு எதிர்ப்புத் தெரிவிச்சாங்க. அதுக்கு கீர்த்தி சனோன், ‘பண்டிகையோட மகிழ்ச்சி ஆடைகள்ல இல்லை. மனசுலதான் இருக்கு’னு பதிலடி கொடுத்தாங்க. ஆனாலும், அந்த நகை விளம்பர நிறுவனம் விளம்பரத்தைத் திரும்ப வாங்கிடுச்சு.”
“எல்லாத்துக்கும் கருத்துச் சொல்றதும் எதிர்ப்புத் தெரிவிக்கிறதும் இப்ப ஃபேஷனா யிருச்சு. உடை எல்லாம் அவங்கவங்க விருப்பம் சார்ந்ததுங்கிறதை இந்தச் சமூகம் எப்ப புரிஞ்சுக்கப் போகுதோ?”
“அது சரி.... இருங்கப்பா, ஆனியன் பஜ்ஜியும் ஃபில்டர் காபியும் கொண்டு வரேன்” என்று சமையலறைக்குச் சென்றார் வித்யா.
வினுவும் விமலும் பஜ்ஜிக்காகக் காத்திருந்தனர்.
பூமியைச் சுற்றிய முதல் பெண்!
ஜீன் பரேட் (Jeanne Baret, 1740–1807) பூமியை முழுவதுமாகச் சுற்றி வந்த முதல் பெண் என அறியப்படுகிறார். பிரான்சின் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், தாவரவியலில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார். 1766-ம் ஆண்டில், பெண்கள் கடற்படைக் கப்பலில் ஏற முடியாத சட்டத்தைத் தாண்ட, ‘ஜான்’ என்கிற ஆண் பெயரில் வேடமிட்டு, தாவரவியலாளர் பிலிபெர் கொமர்சனின் உதவியாளராக பூகன்வில் தலைமையிலான உலகச் சுற்றுப்பயணத்தில் இணைந் தார். பயணத்தில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தாவர மாதிரிகளைச் சேகரித்த இவர், பூகன்விலியா செடியையும் கண்டுபிடித்திருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். 1767-ம் ஆண்டில் இவரது உண்மையான பாலினம் வெளிப்பட்டது. நீண்டகாலம் மறைக்கப்பட்டிருந்த இவரது சாதனை, இன்று உரிய அங்கீகாரம் பெற்றுள்ளது.
