நேபாளத்தை தொடர்ந்து இந்தியாவா? 6 மாநிலங்களை எச்சரிக்கும் ஒன்றிய அரசு

பனிச்சரிவின் காரணமாக நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம், அந்நாட்டையே கதிகலங்க வைத்துவிட்டது. இந்த பெருவெள்ளத்திற்கு, இமய மலைகளில் உள்ள ஏரிகளில் பனிப்பாறைகள் உடைந்து விழுந்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது. பனிப்பாறைகள் உருகுவதால், பனி மலைகளில் உருவாகும் இந்த ஏரிகளில் அருகில் உள்ள பனிச்சிகரங்கள் உடைந்து விழும்போது, அந்த ஏரிகள் உடைந்து , அந்த நீர் அருகில் உள்ள ஆற்றில் கலப்பதால் இது போன்ற பெருவெள்ளம் ஏற்படுகிறது. அந்த வகையில் தான் கடந்த வாரம் ஒரு ஏரி உடைந்து கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் நேபாளத்தையே புரட்டிப்போட்டது.
இந்த சம்பவம் மிகப் பெரிய பேரிடராகப் பார்க்கப்பட்டாலும், இது வெறும் ஆரம்பம் மட்டும் தான் என்று எச்சரிக்கப்படுகிறது . காரணம், இது போன்று ஏராளமான ஏரிகள் இமயமலையில் உள்ளன. இதனால், இந்த இமயமலையை ஒட்டியுள்ள இந்தியா, நேபாளம், திபெத் , சீனா போன்ற நாடுகளுக்கு எப்போதும் பெருவெள்ள ஆபத்து உள்ளது. தற்போது, இமயமலையில் 88 ஏரிகள் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆபத்தை எதிர் நோக்கியுள்ள காஷ்மீர், லடாக் , சிக்கிம், உத்தர்காண்ட் , அருணாசலப்பிரதேசம் மற்றும் இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இமயமலையின் 16 ஆபத்தான பனிச்சிகரங்களில் அண்மையில் எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டன. அங்குள்ள 13 பனிச்சிகர ஏரிகளிலும் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ”பனிச்சிகர ஏரிகள் உடைந்தாலோ அல்லது பனிமலைகள் உடைந்தாலோ பேரிடர்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். இயற்கை பேரிடர் ஏற்பட்டால் உயிர் இழப்பு மற்றும் பொருட்சேதத்தைக் குறைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பெருவெள்ள ஆபத்து இருப்பதால் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)