பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு: ஊராட்சி செயலர்கள் எதிர்பார்ப்பு
வாலாஜாபாத்:பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என, ஊராட்சி செயலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் 274 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி தோறும் தலா ஒரு ஊராட்சிக்கு ஒரு செயலர் என நியமனம் செய்து பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள், ஊராட்சி வளர்ச்சி பணிகள் கண்காணித்தல், வரி இனங்கள் வசூல், வரவு - செலவு கணக்குகள் பராமரித்தல்,குடிநீர், சுகாதாரம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊராட்சியில் இருந்து அரசுக்கு தேவையான புள்ளி விபரங்கள் சமர்ப்பித்தல், மாவட்ட நிர்வாகம் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரக வளர்ச்சித் துறையில் பணியிடங்களை நிரப்பும்போது, இப்பணியாளர்களுக்கு 20 சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அதாவது 20 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருவோருக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகளில் ஏராளமானோர் சீனியாரிட்டி செயலர்களாக இருந்தும் அவர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்படவில்லை என ஊராட்சி செயலர் பலரும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி செயலர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது,
காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது. அதை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் சீனியாரிட்டி ஊராட்சி செயலர்கள் 10க்கும் மேற்பட்டோர் இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவ்வாறு நடைமுறைப்படுத்தபடாமல் உள்ளது.
இதனால்,ஊராட்சி செயலருக்கு 20 சதவீதம் பதவி உயர்வு வழங்க அரசு ஆணை பிறப்பித்தும், பதவி உயர்வு கிடைக்காமல் ஆண்டுகணக்கில் காத்திருக்கும் நிலை இங்குள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி செயலர்களுக்கு பனி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கோரி சமீபத்தில் சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் துறை இயக்குனரிடத்தில் மனு அளித்து சீனியாரிட்டி ஊராட்சி செயலர் குறித்த பட்டியலையும் வழங்கி உள்ளோம்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,
இவ்வாறு, அவர் கூறினார்.