Religion
பதவி உயர்வு தரும் பரமேஸ்வரர்: திருவண்ணாமலைக்குச் செல்லுமுன் ஶ்ரீரமணர் வழிபட்ட சிவத்தலம்!

திருக்கோவிலூர் அருகில் சிறு குன்று போன்ற பாறையின் மீது அமைந்துள்ளது அந்த சிவாலயம். அங்கே அருளும் ஈசனை வழிபட்டால் வாழ்வில் ஏற்றமும் பதவி உயர்வும் நிச்சயமாம். இதை நாம் சொல்லவில்லை. திருஞான சம்பந்தர் தமது பதிகத்தில் அருளியுள்ளார்.
அறியாமையை நீக்கும் தலம்; இமயத்தில் வாழும் ரிஷிகளும் சித்தர்களும் வழிபடும் ஊர்; பதவி உயர்வும் வாழ்வில் ஏற்றமும் கிடைக்கும் இடம்; மூவுலகிலும் சிறப்பான நிலையை அடையும் பாக்கியத்தை அருளும் தலம் இது. இங்குள்ள ஈசனின் அருளால் வீண்பழிகள் அகலும்; ஜென்மாந்திர வினைகள் நீங்கும்!
சரக்கொன்றை மலர்களால் இங்குள்ள ஈஸ்வரனை அர்ச்சிக்க பெரும் புகழ் சேரும்; இவரை தரிசிக்கும் தருணத்திலேயே பாவங்கள் பொடிபடும்; சந்தேகங்கள் அறுபடும்; சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும்; இந்த ஈஸ்வரனின் பொற்பாதங்களைப் பற்றிக் கொண்டால் வீடு பேறு கிடைக்கும்...’ - என்று, அறையணிநல்லூர் இறைவனை தரிசிப்பதால் கிட்டும் பலன்களை பட்டியலிடுகிறார் திருஞானசம்பந்தர்.
ஆம்! யாத்திரையாக சிவத்தலங்களை தரிசித்து வந்த திருஞான சம்பந்தர் இந்தத் தலத்துக்கும் வந்தார். இங்கே முதியவர் கோலத்தில் வந்த ஈஸ்வரன், ``அதோ தெரிகிறது பார் அண்ணாமலை’’ என்று ஞானசம்பந்தருக்குத் திருவண்ணாமலையைக் காட்டி அருளினாராம்.
பிராகாரத்தில், திருஞானசம்பந்தர் திருவண்ணா மலை தரிசனம் கண்ட இடத்தில், அவரின் திருப்பாத பீடத்தை அமைத்திருக்கின்றனர். இந்த இடத்தில் நின்று பார்த்தால், ஞானசம்பந்தருக்குக் கிடைத்த திருவண்ணாமலை தரிசனம் நமக்கும் கிட்டுகிறது.
அவர் மட்டுமல்ல, காஞ்சி பரமாச்சார்யர், ஶ்ரீரமணர், சத்குரு ஞானானந்தகிரி ஸ்வாமிகள் போன்ற மகான்களும் இந்தத் தலத்தை தரிசித்த பிறகே திருவண்ணாமலையை சென்றடைந்தனராம்!
இவ்வளவு அற்புதமான அந்தத் தலம் எது என்கிறீர்களா? அதுதான் அறையணிநல்லூர். தற்போது, அரகண்டநல்லூர் என வழங்கப்படுகிறது. இவ்வூரில் தென்பெண்ணை- துறிஞ்சல் ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அழகுற அமைந் திருக்கிறது அருள்மிகு ஶ்ரீஅதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில்.
இறைவனின் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்கிறீர்களா? இதற்கான காரணத்தை விளக்குகிறது தல புராணம். ஈசானர், துர்வாசர், விஸ்வாமித்திரர் முதலான முனிவர்கள் சிலருக்கு, ஈஸ்வர சக்தியை முழுமையாக அறிய ஆர்வம். அனைவரும் ஞானக்கடவுள் ஹயக்ரீவரிடம் சென்று தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். ‘`முருகப் பெருமானிடம் சென்றால் தகுந்த உபதேசம் கிடைக்கும்!’’ என்ற ஹயக்ரீவர், முனிவர்களை முருகனிடம் அழைத்து வந்தார். முருகனோ, ‘`இதுகுறித்து என் அன்னையே தெளிவாக விவரிப்பார்’’ என்று அனைவரையும் அம்பிகையிடம் அழைத்து வந்தார்.
ஆசி வழங்கிய அம்பிகை, ‘`பூலோகத்தில் உள்ள கிருஷ்ணாரண்யம் செல்லுங்கள். அங்கே தட்சிண பினாகினியும் (தென் பெண்ணை), கௌதமி நதியும் (துறிஞ்சல் ஆறு) சங்கமிக்கும் இடத்தின் வடகரையில், எனது ஞானசக்தி நிறைந்த குன்று உள்ளது. அதில் அமர்ந்து பரமேஸ்வரனை தியானித்து தவமியற்றுங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும்’’ என்று அருளினாள்.
அதன்படியே, நாவல் மற்றும் அத்தி மரங்கள் நிறைந்த கிருஷ்ணாரண்யத்தை அடைந்து, ஞானக் குன்றில் தவத்தில் ஆழ்ந்தனர் முனிவர்கள். இதனால் மகிழ்ந்து அவர்களுக்கு தரிசனம் தந்த சிவபெருமான், வேத ஆகம நாத ரூபம் குறித்து உபதேசித்தாராம். எங்கும் நிறைந்த நாதத்தை அதிதுல்லியமாக உபதேசித்து அருளிய தால் இங்குள்ள இறைவனுக்கு, ‘அதிதுல்ய நாத ஈஸ்வரர்’ என்று திருநாமம்.
அம்பிகையின் திருநாமம் சௌந்திர கனகாம்பிகை; தமிழில்- அருள்மிகு அழகிய பொன்னம்மை! ஞானயோக சக்தி பீடமாக திகழும் இந்த ஆலயத்தில் அல்லி மற்றும் தாமரையை திருக் கரங்களில் ஏந்தியவளாக, ஞானியருக்கும் மகான்களுக்கும் யோக சக்தி கைகூட அருள்புரிகிறாள் அழகிய பொன்னம்மை!
மேற்கு நோக்கி அமைந்திருக்கும் ஸ்வாமி சந்நிதியில்... ரிஷிகள் வேதாகம உபதேசம் பெற்ற இடத்துக்கு நேர் மேலே ரிஷிகோபுரம் அமைந்துள்ளது. இதன் கீழ் நின்று ஸ்வாமியை தரிசிப்பது விசேஷம். இங்கேயுள்ள தெய்வ மூர்த்தியர் அனைவரும் அதீத சாந்நித்தியத்துடன் அருள்கிறார்கள்.
மூலவருக்கு எதிரில் அமர்ந்திருக்கும் நந்திதேவர், சற்றே வலப்புறமாக முகம் திருப்பி அமர்ந்திருக்கிறார். ஈசனின் கட்டளை களை செவிமடுக்க ஒரு காதை கருவறை நோக்கியும்... மற்றொரு செவியால் நமது வேண்டுதலைக் கேட்கும் விதமாகவும் அமர்ந்திருக்கும் இவரை `செவிமடுக்கும் நந்தி தேவர்’ என்கிறார்கள்.
கோயிலில் அருளும் கடிஹஸ்த துர்கையை வழிபட்டால் மனச் சஞ்சலங்கள் நீங்குமாம். அதேபோல், ஸ்வாமி சந்நிதியின் பரிவார தெய்வமாகத் திகழும் ஶ்ரீஜ்யேஷ்டாதேவியை வழிபட்டால், சோம்பல் நீங்கும்; முயற்சிகள் வெற்றி பெறும் என்கிறார்கள் பக்தர்கள்.
பைரவர் இங்கே அசிதாங்க பைரவராக அருள்கிறார். அஷ்ட பைரவ மூர்த்தியரில் முதன்மையானவர் அசிதாங்க பைரவர். அஷ்டமி தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபட மந்திர ஸித்திகள் கைகூடும்; தீவினைகள் நீங்கும். தட்சிணாமூர்த்தி இங்கே மிக வித்தியாசமாக ரிஷபத்தின் மேல் அமர்ந்து மேதா தட்சிணா மூர்த்தியாக அருள்கிறார்.
கன்னிமூலையில் அருளும் பிள்ளையார் உளி படாத வலம்புரி விநாயகர். எங்கு நின்று பார்த்தாலும் அவர் நம்மையே பார்ப்பது போன்ற இந்தப் பிள்ளையாரின் திருமுக அமைப்பு அற்புதம்.
சனி பகவான், வித்தியாசமான கோலத்தில்... ஒரு காலை தரையில் ஊன்றி, மற்றொரு காலை வாகனத்தின் மீது வைத்தபடி காட்சி தருகிறார். இதுபோன்ற அமைப்புடன் திகழும் சனீஸ்வரரை தரிசிப்பதால், பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும்.
இவர்களுடன், சிவபூஜை செய்பவராகத் திகழும் பாலமுருகன், கஜலட்சுமி, பிரயோகச் சக்கரத்துடன் அருள்புரியும் மகாவிஷ்ணு, லிங்கோத்பவர் ஆகியோரை யும் தரிசிக்கலாம். இந்தத் தலத்தின் மற்றொரு சிறப்பு... பீமனால் உருவாக்கப்பட்ட பாண்டவர் தீர்த்தமும், பீமன் பாதமும்! வன வாசத்தின் போது பாண்டவர்கள் இங்கே வாழ்ந்ததாகக் கருதப்படும் ஐந்து குகைகளை யும், திரௌபதி தனியே வசித்த சிறு அறையை யும் காண முடிகிறது. ‘இவை சமண முனிவர்கள் தங்கி இருந்த குகைகள்’ என்றும் தகவல்கள் உண்டு.
எப்படிச் செல்வது?: விழுப்புரம்- திருக் கோவிலூர் சாலையில் விழுப்புரத்தில் இருந்து சுமார் 37 கி.மீ. தொலைவில் உள்ளது அறையணி நல்லூர். திருக்கோவிலூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு.
