Politics
சூலுாரில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
சூலுார்: இந்து முன்னணி உட்பட இந்து இயக்கங்கள் சார்பில், சூலுாரில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
சூலுார் நகர் மற்றும் ஒன்றிய இந்து முன்னணி மற்றும் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத், வீர இந்து சேவா இயக்கம், இந்து மக்கள் கட்சி சார்பில், சூலூர், கண்ணம்பாளையம் பகுதிகளில், 77க்கும் மேற்பட்ட இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்று நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் விசர்ஜன விழா பொதுக் கூட்டம், பெருமாள் கோவில் திடலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. முத்துக் கவுண்டன் புதுார் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்க தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜ்குமார், மதன் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்து இளைஞர் முன்னணி நிர்வாகி சண்முகம், விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதன் நோக்கம் குறித்து பேசினார். தொடர்ந்து விசர்ஜன ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது, நொய்யல் ஆற்றங்கரையில், வழிபாடு செய்த பின் விசர்ஜனம் செய்யப்பட்டன.
முன்னதாக, சீரணி கலையரங்கில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், விசர்ஜன விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். மாநில இணை அமைப்பு பொதுச்செயலாளர் பெருமாள், மாநில இணை பொதுச்செயலாளர் விஜயகுமார், பா.ஜ., மாவட்ட துணை தலைவர் சிதம்பரம் உள்ளிட்டோர் பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
வீர இந்து சேவா சார்பில், சூலுார் புது பஸ் ஸ்டாண்ட் அருகே பொதுக் கூட்டம் நடந்தது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். நிறுவனர் கிருஷ்ணகுமார், ஆன்மிக பிரிவு தலைவர் வடிவேல் சுவாமிகள் ஆகியோர் பேசினர்.