Politics
பகுத்தறிவை பரப்புவதாகக்கூறி பயிர்களை பிடுங்குகின்றனரே! குன்றக்குடி பொன்னம்பல அடிகள் வேதனை

மதுரை: 'சிலர் ஆன்மிகத்தை பரப்புவதாக களைகளை பயிரிடுகின்றனர். சிலர் பகுத்தறிவை பரப்புவதாகக் கூறி பயிர்களை பிடுங்குகின்றனர்'' என, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார்.
மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் நான்காம் தமிழ்ச் சங்க விழா நடந்தது. சங்கத் தலைவர் நாகேந்திர சேதுபதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் துரை கருணாநிதி, திருவள்ளுவர் கழக மதிப்பியல் தலைவர் கமலை விஜயராஜன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சாந்திதேவி வரவேற்றார்.
தஞ்சை பல்கலை முன்னாள் பேராசிரியர் பழனி அரங்கசாமி துவக்கி வைத்து பேசினார். ஆண்டு மலரை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் வெளியிட, முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார் பெற்றார்.
பொன்னம்பல அடிகள் பேசியதாவது: தமிழ் வரலாற்றின் உச்சம் மதுரையில் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும். சிலர் ஆன்மிகத்தை வளர்ப்பதாக, பயிர்களுக்கு பதில் களைகளை பயிரிடுகின்றனர். சிலர் பகுத்தறிவை பரப்புவதாக களைகளுக்கு பதில் பயிர்களை பிடுங்குகின்றனர். இந்த முரண்பட்ட நிலையை களைந்தால் தமிழ் சமூகம் வளம் பெறும். எத்தனை இலக்கியம் இருந்தாலும் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக திருக்குறள் திகழ்கிறது. நாம் எதைக் கற்றாலும் மனித சமூகத்திற்கு பயன்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.
யாதவர் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் ராமசாமி, தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் அருணகிரி, துணை முதல்வர் சுப்புலட்சுமி, பேராசிரியர் பூங்கோதை உட்பட பலர் பேசினர். சங்கச் செயலாளர் மாரியப்ப முரளி, கல்லுாரிச் செயலாளர் தசரதராமன், புரட்சிப் பாவலர் மன்ற தலைவர் வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.