Weather
மானாவாரி நிலங்களில் விதைப்பு பணிகள் துவக்க தயக்கம் :தென்மேற்கு பருவமழை கை கொடுக்காததால் சிரமம்
ஆண்டிபட்டி:தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் விதைப்பு பணிகள் துவக்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
விவசாயம் மட்டுமே முக்கிய ஆதாரமாக உள்ள தேனி மாவட்டத்தில் மழையை மட்டுமே நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் பெய்யும் கோடை மழையில் நிலங்களை உழுது உரமிட்டு விதைப்புக்கு தயார் நிலையில் வைப்பார்கள். ஜூலை, ஆகஸ்டில் துவங்கும் தென்மேற்கு பருவமழையில் விதைப்பு பணிகளை துவக்கி விடுவர்.
நடப்பு ஆண்டில் கோடை மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் விவசாயிகளும் மானாவாரி நிலங்களில் கோடை உழவை தவிர்த்து விட்டனர். கடந்த சில வாரங்களில் அவ்வப்போது பெய்த மழையை பயன்படுத்தி உழவு பணிகளை மேற்கொண்டனர். தென்மேற்கு பருவமழை அடுத்தடுத்து பெய்து கை கொடுக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு விதைப்பு பணிகளை துவக்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, வருஷநாடு, போடி, பெரியகுளம், தேனி பகுதியில் மானாவாரி நிலங்கள் அதிக அளவில் உள்ளன. மானாவாரியாக சிறுதானியங்களில் சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் ஆகியவையும் பயறு வகைகளில் துவரை, பாசி, உளுந்து, மொச்சை, தட்டைப்பயறு வகைகளும் எண்ணெய் வித்துக்களில் எள், ஆமணக்கு, நிலக்கடலை ஆகியவற்றையும் விதைப்பு செய்வர். தென்மேற்கு பருவமழையில் முளைக்கும் செடிகள் வடகிழக்கு பருவ மழையால் வளர்ந்து பலன் கொடுத்து விடும்.
இந்த ஆண்டு செப்டம்பர் முடியும் நிலையில் தேனி மாவட்டத்திற்கு தொடர் மழை இன்னும் கிடைக்கவில்லை. விதைப்புக்கு பின் அடுத்தடுத்து மழை தாமதமானால் பயிர்கள் வளர்ச்சி பாதித்து மகசூல் கிடைக்காது. மேலும் விவசாய பணிகளுக்கு ஏக்கருக்கு பல ஆயிரம் செலவு செய்து பலன் கிடைக்காவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் மானாவாரியில் சாகுபடிசெய்ய தயங்குகின்றனர். விளைந்த பயிர்களை கால்நடைகளின் தீவனத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் நிலை ஏற்படும். மழை தாமதமானால் உழவு, உரமிடுதல், விதைப்புக்காக செலவிட்டத் தொகை வீணாகிவிடும் என்பதால் பலரும் விதைப்பு பணிகளை இன்னும் துவக்கவில்லை என்றனர்.