ரோடுகள் சந்திப்பில் பஸ் ஸ்டாப் நெரிசலால் திணறும் தேவனுார்புதுார்
உடுமலை: உடுமலை தேவனுார் புதுாரில், மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் நெரிசல், விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை, பொள்ளாச்சி தாலுகா எல்லையில் தேவனுார்புதுார் உள்ளது. இந்த இரண்டு தாலுகாவிலிருந்தும், ஆனைமலை -– பழநி வழித்தடத்திலும், வால்பாறை செல்லும் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
அதே போல், உடுமலை, பொள்ளாச்சி பகுதியிலிருந்தும் சுற்றுப்புற கிராமங்களுக்கு ஏராளமான டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. சுற்றுப்புறத்திலுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் மையப்பகுதியாக உள்ளதால், அதிகளவு மக்கள் வந்து செல்கின்றனர்.
தற்போது, தேவனுார் புதுாரில், மூன்று ரோடு சந்திப்பு பகுதியில், பஸ் ஸ்டாப் அமைந்துள்ளது. குறுகிய ரோட்டில், பயணியர் நிழற்கூரை, இருக்கை வசதி என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல், பஸ் ஸ்டாப் உள்ளது.
மூன்று ரோடுகளிலும், ஆக்கிரமிப்புகள் அபரிமிதமாக உள்ள நிலையில், ரோட்டின் இருபுறமும் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் வாகன போக்குவரத்தும் அதிகம் உள்ள நிலையில், பஸ் ஸ்டாப் பகுதியில், நெரிசல் மற்றும் விபத்துக்கள் தொடர்கிறது.
பஸ் ஸ்டாப்பை, பிற வாகனங்கள் கடக்க கடும் சிரமம் ஏற்படுகிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவ, மாணவியர், பொதுமக்கள் கால்கடுக்க நிற்பதோடு, வெயில், மழையிலும் பாதித்து வருகின்றனர்.
எனவே, தேவனுார்புதுார் பகுதியில், நிரந்தரமாக பஸ் ஸ்டாண்ட் அமைக்க, அரசுத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.