Politics
விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் ஹிந்து முன்னணி சார்பில்...

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் ஹிந்து முன்னணி சார்பில் 60 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. தொடர்ந்து நேற்று சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கோட்டக்குளத்தில் விஜர்சனம் செய்யப்பட்டன.
பஸ் ஸ்டாண்ட் அருகே விநாயகர் சிலைகள் ஊர்வலம் துவங்கியது. மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் வினோத்ராஜ், மாவட்ட பொறுப்பாளர் சஞ்சீவிராஜ், மாவட்ட செயலாளர் செந்தில்வேலன் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் ரஞ்சித் பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து 46 விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை காவி கொடியசைத்து துவக்கி வைத்தார். பஸ் ஸ்டாண்டில் இருந்து மாசி வீதிகள் வழியாக சென்று கோட்டைக்குளத்தில் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன. நகர் டி.எஸ்.பி., கார்த்திக் தலைமையிலான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல் சின்னாளபட்டியில் ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 10 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு செம்பட்டி அருகே குளத்தில் விஜர்சனம் செய்யப்பட்டன.
வடமதுரை : அய்யலுாரில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடந்தது. சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து சிலைகள் நேற்று மதியம் துவங்கி தீத்தாகிழவனுார் பேசும் பழநியாண்டவர் கோயில் வந்தன. இங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடவூர் பிரிவு வழியே கடைவீதி சென்றடைந்தது. அங்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ்சங்கர் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சக்திவேல், பொதுச்செயலாளர் மோகன்குமார் வரவேற்றனர். மாநில பொதுச்செயலாளர் மனோகரன், பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் பாலமுருகன் பேசினர். பின்னர் வடமதுரை நகர் வழியே சென்று தும்மலக்குண்டு ரோடு நரிப்பாறை கல்குவாரியில் சிலைகள் கரைக்கப்பட்டன.