நீலகிரி பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் காக்கும் ஆதிமலை..! இந்தியா முழுவதும் விற்பனையாகும் மதிப்பு கூட்டப்பட்...

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பழங்குடி மக்கள் சேகரிக்கும் காட்டுத்தேன், குறுமிளகு, காப்பி போன்ற இயற்கை பொருட்களை மதிப்புக்கூட்டி இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
நீலகிரி மலை மாவட்டத்தில் கோத்தர், தோடர், இருளர், பணியர், குறும்பர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட ஆறு வகையான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வனங்கள் மற்றும் வனங்களை ஒட்டிய பகுதிகளில் வாழ்கின்றனர். இயற்கையாக கிடைக்கும் பல்வேறு பொருட்களை சேகரித்து அதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
முன்பு, பழங்குடி மக்களின் பொருட்கள் குறைந்த அளவிலேயே விற்பனையாகி வந்தன. இடைத்தரகர்கள் லாபம் ஈட்டி வந்த நிலையில், கீ ஸ்டோன் பவுண்டேஷன் மூலமாக ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் பழங்குடி மக்களை பங்குதாரர்களாக இணைத்து, அவர்களின் பொருட்களை உலக அளவில் விற்பனை செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர்.
இதையும் படிங்க: 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒலித்த ரேடியோ..! மெட்ராஸ் பிரசிடென்சி ரேடியோ கிளப் பற்றி தெரியுமா..?
இருளர் மற்றும் குறும்பர் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கிடைக்கும் காட்டுத்தேன், குறுமிளகு, காப்பி, நெல்லிக்காய், வாழைப்பூ, சீவக்காய் போன்ற பொருட்களைக் கொண்டு, அவர்களது பகுதிகளிலேயே மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கும் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தி, உள்ளூர் மக்களின் பிரதிநிதித்துவத்துடன் ஒவ்வொரு பொருளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் மூலம் பழங்குடியினப் பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளதாக ஆதிமலை பழங்குடியினர் உற்பத்தி நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.
