நகராட்சித் துறையில் வசூல்வேட்டை! - செக் வைப்பாரா முதல்வர்?

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதல்வரின் நேரடிக் கட்டுப் பாட்டின்கீழ் இயங்கிவருகிறது. ஆனாலும் அவருக்கே தெரியாமல், திட்டமிட்டு வசூல்வேட்டையில் இறங்கியுள்ளார் அத்துறையின் இயக்குநரான மதுசூதனன்.
தமிழகத்தில் ஆட்சி மாற் றத்திற்குப் பிறகு ஒவ்வொரு துறையிலும் உள்ள அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துவரு கின்றனர். அந்தவகையில் தமிழகம் முழுவதுமுள்ள 148 நகராட்சி கமிஷனர்களுக்கு பணியிட மாற்றம் அறிவித்து, அவ்வப்போது மாற்றம் செய்துவருகிறார் மதுசூதனன். எந்தெந்த நபர்களுக்கு எங்கெங்கு பணியிட மாற்றம் வேண்டும் என்பதை தன்னுடைய விசுவாசி யான ராஜ்குமார் மூலம் கேட்டு செயல்படுத்திவருகிறார்.
யார் இந்த ராஜ்குமார்?
கடந்த ஆட்சிக் காலத்தில் கோவையில் 24ஷ்7 என்கிற 24 மணி நேரமும் தடையில்லா குடிநீர் விநியோகம் திட்டத்தை பிரான்ஸின் சூயஸ் நிறுவனம் தமிழக அரசோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அதற்கான பணிகளை மேற்கொண்டது. இந்த நிறுவனம் திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்துவிடும். அதன் நிர்வா கப் பராமரிப்புக்காக இன்ஃப்ரா இன் நிறு வனத்தை அரசு தேர்வுசெய்தது. அந்த நிறுவனத் தின் உரிமையாளர்தான் இந்த ராஜ்குமார்.
இவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். தன்னுடைய நிறுவனத்தின் செயல்பாடுகளை டெமோ காட்டவந்தபோது, சென்னை மாநக ராட்சியில் துணை ஆணையாளராக இருந்த மதுசூதனனுக்கும் ராஜ்குமாருக்கும் ஏற்பட்ட பழக்கம், நிறுவனத்திற்கு சிபாரிசு செய்து முடித்துக்கொடுத்த காரணத்தால் நெருக்கமான நட்பாக மாறியது. அந்த நட்பு இப்போதும் தொடரும் சூழ்நிலையில், ராஜ்குமார் நிர்வாகப் பராமரிப்பு செய்யும் அதே துறையான நகராட்சித் துறையின் இயக்குந ராக பணியில் அமர்ந்ததும் இருவருக்கும் நெருக்கம் மேலும் அதிகரித்துவிட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சூழ்நிலையில், கோவையில் ஒப்பந்தம் போட்டதைப் போலவே, சேலத்திலும் சூயஸ் நிறுவனத்திற்கே குடிநீர் வழங்கும் திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.1,600 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்ப கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதுமுள்ள நகராட்சி கமி ஷனர்களுக்கு யார் யாருக்கு, எங்கு பணிமாறுதல் வேண்டும் என்பதைக் கண்டறிந்து அவர்களிடம் ஒரு நபருக்கு 25 லட்சம் முதல் 2 கோடிவரை வசூலித்து அதனை நகராட்சி இயக்குநரிடம் ஒப்படைப்பதே ராஜ்குமாரின் பணியாம். இப்படி வேண்டிய இடத்துக்கு பணிமாற்றம் செய்வதற்காக வசூல்செய்த பணத்தை ஹைதராபாத்திலுள்ள அவரது உறவினர் வீட்டில் ஒப்படைத்து வருகிறார்களாம்.
கடந்த ஆட்சிக்காலத்தில் கரூர் மாநக ராட்சி கமிஷனராக இருந்த சுதாவை கும்பகோணம் நகராட்சி கமிஷனராக நியமிக்க 2 கோடி வாங்கியுள்ளார்களாம். ஏன் கும்பகோணம்? ஏன் இந்த ரேட்? என்று பார்த்தால், கும்பகோணம் மகாமகம் விரைவில் வரவிருக்கிறது. கும்பகோணம் மகாமகத்துக்காக சிறப்பு நிதியாக 200 கோடி ஒதுக்க முடிவுசெய்துள்ளனர். கமிஷனராக வருபவர் அதில் நல்லா கல்லா கட்டலாம் என்று சொல்லி பெரிய தொகை வசூலிக்கப்பட்டதாம். வேண்டிய நபரை நியமித்துவிட்டதால், கும்பகோணம் மகாமக சிறப்பு நிதியில் 25% சதவீதம் இயக்குநருக்கு வந்துவிடுமாம்.
இப்படி தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி நிர்வாகத்திற்கு வசூல் வேட்டையில் இறங்கிய சம்பவம் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடிக்கு தெரிய வந்துள்ளது. ஆனால் அதனை முதல்வரிடம் சொல்லமுடியாமல் தவித்துவருகிறார். இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர் விஷ்ணுரெட்டி யாம். இந்த விஷ்ணுரெட்டியும் நகராட்சி இயக்குநர் மதுசூதனன் ரெட்டி யும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்த வர்கள் என்பதால் அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி யிடமாற்றம் செய்தபோதும், இவரை மட்டும் அதே துறை யில் இயக்குநராக தொடரும்படி விட்டுவைத்திருக்கிறார் விஷ்ணு ரெட்டி. எந்த நகராட்சியில் பணி நியமனம் என முடிவுசெய்ய மதுசூதனன், வசூல் செய்ய ராஜ்குமார், பிரச்சனை வந்தால் காப்பாற்ற விஷ்ணுரெட்டி எனத் திட்டமிட்டு, முதல்வரின் கீழ் இயங்கும் துறையில் ஊழல் நடக்கிறது. "ஊழல் செய்தவர்களையும் விடமாட்டேன், வாங்கியவர்களையும் விடமாட்டேன் இனி யாரையும் வாங்கவும் விடமாட்டேன்'' என்று சட்டமன்றத்தில் பேசிக்கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய். முதல்வரின் துறையிலே அவருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சம்பவம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
முதல்வரே இதெல்லாம் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா… இல்லை, அவருக்கே தெரியாமல் நடக்கிறதா என்று நகராட்சி அதிகாரிகள் புலம்பிவருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)