ரெட்டிபாளையம் ரயில் நிலையத்தில் கழிப்பறை வசதியின்றி பயணியர் அவதி

சிங்கபெருமாள் கோவில்: ரெட்டிபாளையம் ரயில் நிலையத்தில், போதிய பராமரிப்பின்றி கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணியர் அவதியடைந்து வருகின்றனர்.
செங்கல்பட்டு – காஞ்சிபுரம் ரயில் தடத்தில் உள்ளது ரெட்டிபாளையம் ரயில் நிலையம். இந்த தடத்தில் திருமால்பூரில் இருந்து செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்களும், காஞ்சிபுரம், அரக்கோணம் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
ரெட்டிபாளையம், சாஸ்திரம்பாக்கம், சீத்தனஞ்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பயணியர் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணியர் அவதியடைந்து வருகின்றனர்.
ரெட்டிபாளையம் ரயில் நிலையத்தில் இருந்து கிண்டி, தாம்பரம், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு தினமும் 100க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
இந்த ரயில் நிலையத்தில் மின்விளக்கு, குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. மேலும், இங்கு கூரை இல்லாததால் ரயிலுக்காக காத்திருக்கும் பயணியர் மழை, வெயில் காலங்களில் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
நடைபாதை முழுதும் செடிகள் வளர்ந்து, விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பயணியரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, செடிகளை அகற்றி சீரமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.