Weather
கேரளாவில் பருவ மழை குறைவால் வறட்சி அபாயம்

மூணாறு: கேரளாவில் தென் மேற்கு பருவ மழை குறைவால் வறட்சி அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை நன்கு கை கொடுக்கும் என்பதால் முடிந்தவரை வறட்சி பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்தாண்டு காலநிலை மாற்றத்தால் மழை குறையும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் ஆகஸ்ட் இறுதி வரையிலான கால அளவில் 22 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலத்தில் 2024,2025ல் 13 சதவீதம் குறைவாகும். இதுனால் மாநிலத்தில் வறட்சி பாதிப்பு அபாயம் எழுந்துள்ளது.
செப்டம்பரில் சராசரி மழையை விட இந்தாண்டு 9 சதவீதம் மழை குறையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனை கணக்கிட்டு மாநிலத்தில் வறட்சி அபாயம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் அணைகளில் நீர்மட்டம், நீர்நிலைகளில் நீர் இருப்பு, வெப்பநிலை ஆகியவற்றை கண்காணித்து வருகிறது. அவசரகால சூழலை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழை குறைவால் 300 முதல் 500 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் 15 முதல் 30 நிமிடங்கள் மின் வெட்டை அமல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது.