Politics
இடைத்தேர்தல் செலவுக்கு பணம் தேவை; வீடியோ வெளியிட்டு நிதி திரட்டும் சீமான்

சென்னை: இடைத்தேர்தலில் செலவு செய்வதற்காக, நிதி வழங்குமாறு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோ பதிவு: தமிழகத்தில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளிலும், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தோல்விகளை நாங்கள் நிரந்தரமாக பார்ப்பதில்லை; தற்காலிக பின்னடைவாக மட்டுமே பார்க்கிறோம்.
எப்போதும் போல மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் கொண்டு, இம்முறையும் தனித்து களத்தில் போட்டியிடுகிறோம். எங்களிடம் படை மற்றும் கருத்து இருக்கிறது; களத்தில் நின்று உழைப்பதற்கான வலிமை இருக்கிறது. அனைத்தும் இருந்தும் எங்களிடம் உள்ள ஒரே பின்னடைவு பொருளாதார வலிமை தான்.
எப்போதும், மக்கள் தான், சிறுகச் சிறுக நிதிப் பங்களிப்பை அளித்து, எங்களை வலிமைப்படுத்தி, அரசியல் களத்தில் பணியாற்ற வைத்திருக்கின்றனர். இம்முறையும் மக்கள் அதை செய்ய வேண்டும். மக்களின் பிரச்னைகளுக்காக தொடர்ந்து களத்தில் நின்றதால், என் மீது மட்டும் நூற்றுக்கணக்கான வழக்குகள் உள்ளன.
நா.த.க., நிர்வாகிகளும் பல்வேறு வழக்குகளையும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர் கொண்டிருக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக, மக்களோடு மக்களாக, மழையிலும், பனியிலும் வெயிலிலும் நின்று, மக்களின் துயரங்களைப் பற்றி பேசி, உறக்கத்தைத் தொலைத்து, அவர்களுக்காக போராடி இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.