Politics
“அமைச்சருக்கே லஞ்சம் குடுத்துட்டோம்...’’

கொக்கரித்த ஆம்னி பஸ் நிறுவனம்... ஆக்ஷனில் இறங்கிய ஜூ.வி!
பண்டிகை நாள்களில் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற சாமானிய மக்களின் ஆசையை, ஆம்னி பஸ் நிறுவனங்கள் வசூலிக்கும் தாறுமாறான கட்டணங்கள் நசுக்குகின்றன. சாதாரண நாள்களைவிட இரண்டு, மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பது ஒருபுறமிருக்க, ஒரு வாரத்துக்கு முன்பே பணம் கொடுத்து முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை, பயணம் தொடங்கும் நேரத்தில் ரத்துசெய்து, பயணிகளை நடுத்தெருவில் நிறுத்தும் கொடுமையும் அரங்கேறுகிறது.
``டிக்கெட் போச்சு... ஊருக்குப் போற வழியும் போச்சு!’’
இது தொடர்பாக நம் அலுவலகத்துக்குப் புகார்கள் வரிசைகட்டின. பாதிப்புக்குள்ளான சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த லலிதா கூறுகையில், ‘‘சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு குடும்பத்துடன் செல்ல, பத்து நாள்களுக்கு முன்பாக `ரெட் பஸ் ஆன்லைன் ஆப்’ மூலம் ஒரு டிராவல்ஸில் புக் பண்ணியிருந்தேன்.
ஊருக்குக் கிளம்புறதுக்கு முதல் நாள் (செப்டம்பர் 11) திடீர்னு செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. ‘என்னுடைய டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதாகவும், அக்கவுன்ட்டுக்குப் பணம் திரும்பி வந்துடும்’னும் அந்த மெசேஜில் சொல்லப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்துக்கு போன் செய்தேன். ‘கேன்சலானது ஆனதுதான். தேவைன்னா அதே ஆன்லைன் ஆப் மூலமா இன்னொரு தடவை புக் பண்ணுங்க. ரேட் கொஞ்சம் கூடுதலா இருக்கும்’னு சொன்னாங்க. உடனே, இந்தப் பிரச்னையை, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகனிடமும், ரெட் பஸ் ஆப்பின் பொது மேலாளர் சண்முகனிடமும் எடுத்துச் சென்றேன்."
``அமைச்சருக்கே பணம் குடுத்துட்டோம்...’’
‘நாங்க என்ன செய்ய முடியும்... ரெட் பஸ் ஆப்ங்கறது இடைத்தரகர்தான். சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்திடம்தான் கேக்கணும்...’ என்று சொன்ன சண்முகன், பிறகு அது தொடர்பாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. விடாமல் துரத்திய நான், மீண்டும் டிராவல்ஸ் நிறுவனத்தைத் தொடர்புகொண்டேன். ‘உங்களைப் பத்தி போக்குவரத்துத்துறையிலும், அமைச்சரிடமும் புகார் கொடுப்போம்’ என்று சொன்னதும், ‘போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வரைக்கும் பணம் குடுத்துட்டுத்தான் வண்டி ஓட்டுறோம்... உங்களால ஒண்ணும் செய்ய முடியாது’ என்று சொல்லி போனை வைத்துவிட்டனர். ஊருக்குக் கிளம்புற நேரத்துல டிக்கெட்டை கேன்சல் பண்ணிட்டாங்க. வேற பஸ்ஸும் கிடைக்கலை. யார்கிட்ட போய் முறையிடுறதுன்னே தெரியலை...” என்று புலம்பினார்.
உடனே சம்பந்தப்பட்ட பஸ் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பேசிப் பார்த்தோம். அதே மாதிரியான பதிலையே சொன்னார்கள்.
இதையடுத்து, ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை மற்றும் கட்டணத்தை அதிகப்படுத்தும் வித்தையாகக் கடைசி நேரத்தில் முன்பதிவை ரத்து செய்யும் மோசடி குறித்துத் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். `ஆய்வு செய்துவிட்டு உங்களை அழைக்கிறேன்’ என்ற அமைச்சர், இரண்டு மணி நேரத்துக்குப் பின்பு நம்மைத் தொடர்புகொண்டார்.
``நீங்கள் சொல்வதுபோல ஆன்லைன் ஆப்களும், ஆம்னி பஸ் ஆபரேட்டர்களும் சேர்ந்துதான் மக்களை ஏமாற்றி, இப்படிப்பட்ட கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். அதைச் சரிப்படுத்த அரசுத் தரப்பில் முறையான நடவடிக்கை எடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறேன். கடைசி நேரக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க, பல்வேறு அரசு அதிகாரிகள்கொண்ட தனித்தனி குழுக்கள் அமைத்து, பயணிகளிடம் விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். கட்டணக் கொள்ளை கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்’’ என்றார்.
“4 ஆம்னி பஸ்கள் பறிமுதல்... ரூ.17 லட்சம் அபராதம்!”
சில மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் நம்மைத் தொடர்புகொண்ட அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், ‘‘விதிகளை மீறிக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 17 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பயணச்சீட்டுகளை ரத்துசெய்து, அதிக கட்டணம் வசூலித்தது கண்டறியப்பட்டு, கூடுதலாக வசூலித்த தொகையைப் பயணிகளிடம் திருப்பி வழங்கியிருக்கிறோம்.
இனி, இப்படிப்பட்ட மோசடியில் எந்த ஆம்னி பஸ் நிறுவனம் ஈடுபட்டாலும், நிறுவன பஸ்கள் முடக்கப்படும். உரிமம் ரத்துசெய்யப்படும். நியாயமான காரணங்களுக்காக பஸ் பயணம் ரத்துசெய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம், பயணிகளின் பயணத்துக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அண்ணா நகர் லலிதாவுக்கு ஏற்பட்ட சிக்கல் குறித்தும் விசாரித்து, சம்பந்தப்பட்ட பஸ் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்து பைசா கூட லஞ்சம் வாங்காமல், போக்குவரத்துத்துறை அமைச்சராகச் செயல்பட்டுவருகிறேன். ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளையை என் கவனத்துக்குக் கொண்டு வந்த ஜூ.வி-க்கு நன்றி’’ என்றார்.
