Economy, business and finance
தரமணியில் செமிகண்டக்டர் மையம்; மத்திய அரசு ரூ.190 கோடி உதவி

சென்னை: தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனமும், சென்னை ஐ.ஐ.டி.,யும் இணைந்து, தரமணியில், 363 கோடி ரூபாயில் அமைக்க உள்ள மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையத்திற்கு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், 190 கோடி ரூபாய் நிதியுதவி செய்ய உள்ளது.
செமிகண்டக்டர் இறக்குமதியை தவிர்த்து, உள்நாட்டு உற்பத்தியை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. தமிழகத்தில் செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தி போன்றவற்றை உள்ளடக்கிய நிறுவனங்களின் தொழில் முதலீடுகளை ஈர்க்க, 'தமிழக செமிகண்டக்டர் இயக்கம் - 2030' எனும் திட்டத்தை, தமிழக அரசு தொடங்கியது.
எனவே, 'டிட்கோ' மற்றும் சென்னை ஐ.ஐ.டி., இணைந்து, தரமணியில் மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மை யத்தை அமைக்க உள்ளன.
இதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. இந்த மையம், 363.51 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.
இதில் தமிழக அரசு, 100 கோடி ரூபாயும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், 190 கோடி ரூபாயும் நிதியுதவி செய்ய உள்ளன. மேலும், பங்குதாரர்களாக இணைய உள்ள தொழில் நிறுவனங்களின் பங்கு, 67.50 கோடி ரூபாய். நிலத்தை தமிழக அரசு வழங்கும்.
மையத்தில் மாணவர்கள், தொழில்முனைவோருக்கு, செமிகண்டக்டர் வடிவமைப்பு, உருவாக்கம், பேக்கேஜிங் உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்படும்