Lifestyle and human interest
குடிநீர் கேட்டு ரோடு மறியல்
வத்தலக்குண்டு:கட்டக்காமன்பட்டியில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
கட்டக்காமன்பட்டி ஊராட்சியில் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு ஒரு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இது பற்றாக்குறையாக இருப்பதாக ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் அலட்சியம் காட்டியதால் பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர். தற்போது விநியோகிக்கும் குடிநீரும் சுகாதாரமற்றதாக இருப்பதால் உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது, சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இந்த மறியலால் திண்டுக்கல் - குமுளி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தேனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் காட்ரோடு கெங்குவார்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டன. போலீசார், ஊரக வளர்ச்சி துறையினர் சமரசம் செய்த பின் மறியல் கைவிடப்பட்டது.