Crime, law and justice
ஆபத்தான நிலையில் பஸ் ஸ்டாப் நிழற்குடை
திருப்பூர்: ஆபத்தான நிலையில் அச்சுறுத்தி வரும், கோவில்வழி பஸ் ஸ்டாப்பை விரைவில் சீரமைக்க வேண்டுமென, பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில்வழி அருகே பஸ் ஸ்டாண்ட் அகை்கப்பட்ட போது, தேசிய நெடுஞ்சாலைத்துறை ரோடு, தேவையான இடங்களில் அகலப்படுத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில், நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போது, சிறிய அளவிலான பஸ் ஸ்டாப் நிழற்குடைகள் அமைக்கப்பட்டன.
அவ்வகையில், பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள நிழற்குடை மீது கனரக வாகனம் மோதி சேதமாகியது. பல மாதங்களாகியும், அதே நிலையில் கவனிப்பாரற்று இருக்கிறது. மேற்கூரை, மிகவும் சாய்ந்த நிலையில் இருப்பதால், பயணிகள் நிழற்குடையின் கீழ் நிற்க அஞ்சுகின்றனர். கடந்த சில மாதங்களாக, பயன்பாடின்றி, பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. கொளுத்தி எடுக்கும் வெயிலில் பஸ்சுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, நிழற்குடையை சீரமைத்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.