Economy, business and finance
சுங்க நடைமுறைகளை எளிதாக்க பிரிக்ஸ் மாநாட்டில் முன்னுரிமை: ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை: டில்லியில் வரும், 12, 13ம் தேதிகளில் நடைபெறவிருக்கும் 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில், வணிக நிறுவனங்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் விரைவான சுங்க நடைமுறைகள், மேம்பட்ட சரக்கு மற்றும் போக்குவரத்து இணைப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என, எப்.ஐ.இ.ஓ., எ னப்படும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டமைப்பின் தலைவர் ரல்ஹான் தெரிவித்ததாவது:
பிரிக்ஸ் நாடுகள் ஒன்றாக இணைந்து, உலக வர்த்தகத்தில், 26 சதவீத பங்கை கொண்டுள்ளன. இதனால், பாரம்பரியமான சந்தைகளுக்கு அப்பால், இந்திய ஏற்றுமதியை பல்வகைப்படுத்த முக்கிய தளமாக பிரிக்ஸ் அமைகிறது.
பொறியியல் பொருட்கள், மருந்து, ரசாயனம், ஜவுளி, ஆடைகள், மோட்டார் வாகனம், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், வேளாண் பொருட்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன.
அதே நேரத்தில், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பால் இந்தியாவுக்கு முக்கிய கனிமங்கள், எரிசக்தி, தொழில்நுட்பம், மூலதனம், புதிய உற்பத்தி கூட்டாண்மை பெற வாய்ப்பு கிடைக்கும்.
இந்த உச்சி மாநாட்டில், வணிக நி றுவனங்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில், விரைவான சுங்க நடைமுறைகள், அதிக ஒழுங்குமுறை வெளிப்படைத்தன்மை, தரநிலைகள் மற்றும் இணக்க மதிப்பீடுகளை பரஸ்பரம் அங்கீகரித்தல், மேம்பட்ட சரக்கு மற்றும் போக்குவரத்து இணைப்பு, டிஜிட்டல் வர்த்தக ஆவணங்கள், எளிதான எல்லைகள் தாண்டிய பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட நடைமுறை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.