போர் துயரத்துக்கு சாட்சியான 300 காதல் கடிதங்கள்!

அந்தக் கடிதங்களை எழுதியவர் நியூயார்க்கின் பிராங்க்ஸ் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் லூயிஸ் வெப்பர். குடும்பத்தினர் அவரைச் செல்லமாக ‘ஸ்பீடி’ (Speedy) என்று அழைத்தனர்.
2022-ம் ஆண்டின் ஓர் அமைதியான மதியப் பொழுது. நியூயார்க்கிலுள்ள ராணுவ வீரர்களுக்கான சேவை அமைப்பான USO அலுவலக வாசலில், முகவரியோ, அனுப்பியவர் பெயரோ இல்லாத ஒரு அட்டைப்பெட்டி அநாதையாகக் கிடந்தது. பெட்டியைத் திறந்தபோது, உள்ளே காலத்தால் பழுப்பேறிய 300-க்கும் மேற்பட்ட கடிதங்கள் அடர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் இரண்டாம் உலகப் போர், உலகையே உலுக்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில் எழுதப்பட்டவை.
அந்தக் கடிதங்களை எழுதியவர் நியூயார்க்கின் பிராங்க்ஸ் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் லூயிஸ் வெப்பர். குடும்பத்தினர் அவரைச் செல்லமாக ‘ஸ்பீடி’ (Speedy) என்று அழைத்தனர். அவர் தன் மனைவி ஃபிரான்சஸுக்கு எழுதிய கடிதங்கள் அவை. திருமணமாகி சில மாதங்களிலேயே, இரண்டாம் உலகப் போர் அவர்களைப் பிரித்தது. 1942, ஜூன் 9-ம் தேதி ராணுவத்தில் சேர்ந்த ஸ்பீடி, பின்னர் அட்லான்டிக் கடலுக்கு அப்பால் போர்ப்பணிக்கு அனுப்பப்பட்டார்.
வடஆப்பிரிக்கா, சிசிலி, இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, செக்கோஸ்லோவாக்கியா எனப் போர் அவரை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நகர்த்திக்கொண்டேயிருந்தது. ஆனால், அவர் எங்கு சென்றாலும் நியூயார்க்கில் காத்திருந்த அவருடைய மனைவி ஃபிரான்சஸுக்குத் தவறாமல் கடிதங்கள் அனுப்பிக் கொண்டேயிருந்தார்.
1942, ஜூன் 17-ல் ராணுவப் பயிற்சியின் தொடக்க நாள்களில், ஃபிரான்சஸுக்கு அவர் எழுதிய முதல் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்...
``என் மனம் நேற்றைவிட இன்று சற்று தெளிவாக இருக்கிறது. இந்த ராணுவ வாழ்க்கை என்னை ஒரு நிமிடம்கூடத் தனியாக யோசிக்க விடுவதில்லை. அதுவும் ஒருவகையில் நல்லதுதான். வீட்டைப் பற்றியும், உன்னைப் பற்றியும் நினைக்கத் தொடங்கினால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும்...’’
திருமணமான சில மாதங்களிலேயே, போர்க்களத்தின் பேரிரைச்சலுக்குள் தள்ளப்பட்ட ஒரு சாதாரண அமெரிக்க வீரனின் இந்த வரிகள், எண்பது ஆண்டுகள் கழிந்த பின்னும் வாசிப்பவரின் நெஞ்சில் ஒரு மெல்லிய நடுக்கத்தைப் பரப்புகின்றன.
நியூயார்க்கின் பிராங்க்ஸ் பகுதியில் பிறந்து வளர்ந்த சாதாரண இளைஞன் ஸ்பீடி. போர்க்களத்தில் அவருக்கு வழங்கப்பட்ட சீருடையும், சிகை அலங்காரமும் அவரை ஒரு வீரனாக மாற்றியிருக்கலாம். ஆனால், தன் மனைவிக்குக் கடிதம் எழுத உட்காரும் போதெல்லாம் அவர் ஒரு கவிஞனாக மாறியிருந்தார். ‘இங்கிலாந்தில் ஏதோ ஓர் இடத்தில்’, ‘பிரான்ஸில் ஏதோ ஓர் இடத்தில்’ எனத் தொடங்கும் அவரது கடிதங்கள், “நீ எப்போதும் என் இதயத்தில் இருக்கிறாய்” என்ற வரியோடுதான் முடியும்.
போரின் கொடூரத்துக்கு நடுவே, மனித மனம் தன் இயல்பான உணர்வுகளையும், அன்பையும் எப்படித் தக்கவைத்துக்கொள்கிறது என்பதற்கு ஸ்பீடியின் வரிகளே சாட்சி. பிரான்ஸின் கரையை நோக்கி கப்பல்கள் நகர்ந்த ‘டி-டே’ (D-Day) என்னும் வரலாற்று நிகழ்வைத் தன் கடிதத்தில், “உலகிலேயே மிகப்பெரிய நாடகம் அரங்கேறும்போது நான் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தேன்” என்று விவரிக்கும் ஸ்பீடி, போரின் தீவிரத்தைத் தன் காதல் கலந்த வரிகளில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்...
“இங்கிலாந்து நீரிணையைக் கடந்து நாங்கள் நகர்ந்தபோது, உனது அணைப்பில் இருப்பதுபோலவே எனக்குப் பாதுகாப்பாக இருந்தது. ஏனென்றால், என் கண்கள் எட்டிய தூரம் வரை போர்க்கப்பல்கள் மட்டுமே மிதந்தன. மேலே நிமிர்ந்து பார்த்தபோது சூரியனைக்கூடப் பார்க்க முடியவில்லை; அந்த அளவுக்கு எங்களின் போர் விமானங்கள் வானத்தையே மறைத்திருந்தன. என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத காட்சி அது...’’
``கடந்த முறை நீ அனுப்பிய கடிதத்தில், எனக்குத் தேவையான பொருள்கள் பத்திரமாக வந்து சேர்ந்தனவா என்று கேட்டிருந்தாய். இன்னும் வந்து சேரவில்லை. எனக்குப் பிடித்த ஒன்று வந்து சேரவில்லை. எனக்கு நீதான் வேண்டும். அதனால் உன்னை நீயே ஒரு பார்சலாகப் பொட்டலம் கட்டி, மேலே `சரக்கு சேதமடையக்கூடியது' (Fragile) என்று எழுதி அனுப்பிவை. அது என்னிடம் பத்திரமாக வந்து சேர்ந்துவிடும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை’’
என்று குறும்புடன் எழுதியிருக்கிறார்.
கடிதங்களில் ஸ்பீடி தன் மனைவியை ‘நக்கிள்ஹெட்’ (Knucklehead - சுட்டிப் பயலே), ‘மீட்பால்’ (Meatball) எனப் பல்வேறு வித்தியாசமான செல்லப் பெயர்களில் குறிப்பிட்டிருக்கிறார். எல்லாவற்றையும்விட, அவரது ஒரு வரி அந்தக் காலகட்டத்தின் வலியை நமக்குள் கடத்துகிறது... “இந்தப் போர் முடியும் வரை நாம் இருவருமே வாழ்ந்துகொண்டிருக்கப் போகிறோம் என்பதைவிட, சும்மா உயிரோடு இருக்கப் போகிறோம், அவ்வளவுதான்.’’
ஒருமுறை கடிதம் மூலமாகத் தன் தாயின் புகைப்படத்தைப் பார்த்த ஸ்பீடி மனமுடைந்து பதில் கடிதத்தில்,
``இரண்டே ஆண்டுகளில் ஒரு மனிதரின் முகத்தைக் காலம் இப்படி மாற்றிவிடுமா... அம்மா அவ்வளவு முதிர்ச்சியாகவும் கவலையோடும் தோற்றமளிக்கிறார். இதைப் பார்த்த பிறகுதான் யோசிக்கிறேன்... ஃபிரான்சஸ், நீ இப்போது பார்க்க எப்படி இருப்பாய்?’’
என்று ஏக்கத்துடன் எழுதியிருக்கிறார்.
இப்படியாக, அந்தக் கடிதப் பெட்டி முழுக்கவே மனித உணர்வுகளின் அரிய பொக்கிஷங்கள் நிரம்பிக்கிடந்தன.
USO அலுவலகத்தில் இந்தக் கடிதப் பெட்டியை ஆவணக் காப்பாளர்கள் மிகவும் பத்திரமாகப் பாதுகாத்துவந்தனர். போர்க்களத்தில் எழுதப்பட்ட இந்தக் காதல் வரிகளை உலகுக்கு உணர்த்தவும், இந்தத் தம்பதியின் பின்னணியைக் கண்டறியவும் அந்த அமைப்பு முயன்றது.
இதற்காக 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தக் கடிதங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டன. மேலும், இரண்டாம் உலகப் போரை மையமாகக்கொண்டு வெளியான திரைப்படம் ஒன்றின் பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ஸ்காட், ஸ்பீடி வெப்பர் ‘டி-டே’ நிகழ்வின்போது தன் மனைவி ஃபிரான்சஸுக்கு எழுதிய உணர்வுபூர்வமான கடிதத்தின் வரிகளை நேரடியாக வாசித்து ஒரு வீடியோவை வெளியிட்டார்.
இந்த விழிப்புணர்வு முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மேத்யூ பிரவுன் என்ற தன்னார்வ வரலாற்று ஆய்வாளர் (Genealogist) தனது சொந்த முயற்சியால் ஸ்பீடியின் வம்சாவளிப் பதிவுகளைத் தீவிரமாகத் தேடினார். அதன் பலனாக, ஸ்பீடியின் சகோதரியின் மகனான ஆர்தர் செரோட்டாவைக் கண்டுபிடித்தார். அவருக்கு இப்போது 84 வயது. அவர் ஸ்பீடியைப் பற்றிப் பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
போர் முடிந்த பிறகு, ஸ்பீடி பத்திரமாகத் தாய்நாடு திரும்பினார். போரின் ரணங்களை மறந்து, ஃபிரான்சஸுடன் மீண்டும் இணைந்து தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவர் லாரி ஓட்டுநராகவும், ஃபிரான்சஸ் அஞ்சல் அலுவலக மேலாளராகவும் பணியாற்றினர். இறுதிக்காலம் வரை மகிழ்ச்சியாக வாழ்ந்த இந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. ஆனால், இறுதிவரை ஒருவர்மீது ஒருவர் வைத்திருந்த அன்பு குறையவே இல்லை.
ஸ்பீடி தன் வாழ்நாளில் போரைப் பற்றி ஒரு வார்த்தைகூட வீட்டில் பேசியதே இல்லை என்ற உண்மையையும் அவரின் குடும்பத்தினர் பகிர்ந்தனர். போரின் கொடூரங்களை அனுபவித்தவர்கள் பெரும்பாலும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. ஆனால், அந்த நிசப்தத்தின் பின்னணியிலுள்ள உண்மைகளை இந்தக் கடிதங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நொடிக்கு நூறு மெசேஜுகளை அனுப்பி அழித்துவிடும் நமக்கு, இந்தக் கடிதப்பெட்டி ஒரு புதிய கோணத்தை உணர்த்துகிறது. தொழில்நுட்பம் மனிதர்களை நெருக்கமாகக் கொண்டு வந்திருக்கலாம்; ஆனால், உணர்வுகளைக் கொட்டி எழுதப்படும் கடிதங்களையும், அது வந்து சேரும் வரை இருக்கும் நீண்ட காத்திருப்புகளையும், காகிதத்தில் கையெழுத்தாகப் பதிந்த அந்த அன்பின் ஆழத்தையும் நாம் எங்கேயோ தொலைத்து விட்டோமோ என்று யோசிக்க வைக்கிறது.
இன்றுவரை அந்தப் பெட்டியை USO அலுவலகத்துக்கு அனுப்பியது யார் என்று தெரியவில்லை. ஃபிரான்சஸ் தன் கணவனின் சில கடிதங்களை ஏன் பிரிக்காமலேயே வைத்திருந்தார் என்பதும் ரகசியமாகவே இருக்கிறது. ஸ்பீடியும் ஃபிரான்சஸும் ஃபுளோரிடாவில் தங்கள் 78 மற்றும் 87-வது வயதில் காலமானார்கள்; அருகருகே புதைக்கப்பட்டனர்.
அவர்கள் மறைந்துவிட்டனர். ஆனால், அந்த 300 கடிதங்களும் இப்போதும் பேசிக்கொண்டிருக்கின்றன.
போர் என்பது வெறும் எல்லைகளையும், அரசியலையும் சார்ந்ததல்ல; அது பிரிந்து வாழும் மனிதர்களின் மௌனமான கண்ணீராலும், எதிர்பார்ப்புகளாலும் எழுதப்பட்டது என்பதை உலகுக்கு இந்தக் கடிதங்கள் நினைவூட்டிக்கொண்டே யிருக்கின்றன.
