Arts, culture, entertainment and media
மேடையில் வைத்தே தம்பியை கலாய்த்த இளையராஜா; சிரிப்பலையில் மூழ்கிய அரங்கம்

”லெனின் பாண்டியன்” படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர்கள், திரைக்கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது பலரும் தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த படத்தில், நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவருடன் இயக்குநர் கங்கை அமரன், ரோஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரிதா ராவ் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
’சத்யஜோதி’ நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்ட விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பேசிய இளையராஜா பழைய நினைவுகள் குறித்துப் பேசினார். அப்போது, அவர் பேசுகையில், “நான் ஒரு முறை பணிக்குத் தாமதமாக வந்தேன். அதாவது, வழக்கமாக 7 மணிக்கே வந்துவிடுவேன். ஆனால், அன்று 5 நிமிடம் தாமதமாக வந்துவிட்டேன். அப்போது, அங்கிருந்த சிவாஜி கணேசன் என்னைப்பார்த்து, ராசா நீயுமா லேட்டு? எனக்கேட்டார். அதற்கு, நீங்கள் 25 வருடம் முன்னதாகவே வந்துவிட்டு (திரைத்துறைக்கு) என்னை லேட்டுனு சொன்னா எப்படி? என்று கேட்டேன்” என்று நகைச்சுவையாகப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் தனது தம்பியும், பல்திறன் கலைஞருமான கங்கை அமரன் குறித்துப் பேசினார். அவர் பேசுகையில், “படத்தில் கங்கை அமரன் நடித்திருக்கிறார். அவர் என்னிடமே நல்லா நடிப்பார். படத்திலும் நன்றாக நடித்துள்ளார்” என்று கிண்டலடித்தார். மேடையில் இருக்கும் போதே தனது தம்பியை அவர் கலாய்த்த சம்பவம், அரங்கில் இருந்த அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது. இந்நிலையில், இது சம்பந்தமான காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)