பொது –– நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் பலி
குன்றத்துார்: படப்பையில், தனியார் ரிசார்ட் நீச்சல் குளத்தில் மூழ்கி, 4 வயது சிறுவன் இறந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குன்றத்துார் அருகே, படப்பை அடுத்த வஞ்சூவஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சக்திவேல், தன் மகன் நிரஞ்சன், 4, மற்றும் உறவினர்களுடன், படப்பை, பெரியார் நகரில் உள்ள தனியார் ரிசார்டிக்கு நேற்று சென்றார்.
பெரியவர்கள் நீச்சல் குளத்தில் குளித்தனர். அதன் அருகே விளையாடி கொண்டிருந்த நிரஞ்சன், திடீரென நீச்சல் குளத்தில் தவறி விழுந்து மூழ்கினான்.
சிறிது நேரத்திற்கு பின், குளத்தில் சிறுவன் மிதப்பதை பார்த்து, பெற்றோர் மீட்டனர். ‘108’ ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், நிரஞ்சன் இறந்ததாக தெரிவித்தனர். படப்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.