Environment
நேபாள வெள்ளத்தில் மாயமான மூவரின் குடும்பத்தினருக்கு டி.என்.ஏ., பரிசோதனை
தேனி: நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்று வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான தேனியை சேர்ந்த மூவரின் குடும்பத்தினருக்கு மதுரையில் டி.என்.ஏ., பரிசோதனை செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியை சேர்ந்த சரஸ்வதி 67, மகன் செல்வம் 49, மனைவி சித்ராதேவி 40. இவர்கள் மூவரும் சென்னையை சேர்ந்த யாத்திரை நிறுவனம் மூலம் நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். ஆக.14 ல் 49 பேருடன் சீனா வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றுவிட்டு நேபாளம் வழியாக சென்னை திரும்புவதாக கூறி இருந்தனர். ஆனால் நேபாளத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மாயமாகினர்.
தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களை மீட்டு தரக்கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தினர் மனு கொடுத்தனர். எனினும் 10 நாட்கள் கடந்தும் அவர்களின் நிலை குறித்து தெரியவில்லை.
இந்நிலையில் மாயமான செல்வத்தின் மகன் திருலோக சுந்தர் 21, சித்ராதேவியின் தாயார் தனலட்சுமி 64, சரஸ்வதியின் மற்றொரு மகன் சத்தியநாதன் ஆகியோருக்கு டி.என்.ஏ., பரிசோதனை செய்யப்பட்டது.
இதற்காக தேனி மாவட்ட நிர்வாகம் மூலம் மதுரையில் உள்ள தடய அறிவியல் துறை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பரிசோதனை முடிவுகள் நேபாள அரசின் இணையதள பக்கத்தில் பதிவேற்றப்பட்டு ஆய்வு செய்யப்படும் எனவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.