Crime, law and justice
கோயிலை வைத்து அரசியல் செய்யும் கூட்டம்; அமைச்சர் ரமேஷ் ஆவேச பேட்டி

சென்னை: கோயிலை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த கும்பல் கோயிலை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: கார்த்திகை தீபம் பிரச்னை இல்லைங்க; கொண்டாட்டம். கார்த்திகை தீபத்தை எப்போதும் போல மக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரட்டும். அதன்பிறகு பாருங்கள். கோயில்களில் செல்போன் அனுமதி இல்லை; இந்தத் திட்டம் தோல்வியடையவில்லை. இதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று ஒரு கும்பல் இருக்கிறது.
கோயில்களில் நல்லது செய்தாலும் எதிர்க்கிற ஒரு கும்பல் இருக்கிறது. கோயிலை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த கும்பல் கோயிலை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும். அப்படி செய்தாலும் அவர்களை தமிழக மக்கள் மதிக்கப் போவதில்லை. அதனால் அது மிகப் பெரிய விஷயம் கிடையாது, நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஏற்கனவே கோயில்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். மக்களுக்கு ஏதும் பாதிப்பு வந்தால், சிரமம் ஏற்பட்டால் கோயில்களே அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறோம்.
மக்களுக்கு என்ன தேவையோ, அதை செய்வதற்கு தான் அரசு; நாங்கள் அதை தான் செய்து வருகிறோம். வரும் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றிக்காக மிகப்பெரிய உழைப்பை போட இருக்கிறோம். மக்கள் பணி செய்து கொண்டிருக்கிறோம். முதல்வர் விஜய் ஆட்சியில் இன்று தமிழகம் சீரும் சிறப்புமாய் இருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், சிறப்பாக இருக்கிறார்கள்.
2026 தேர்தலில் நாங்கள் ஒரு சீட்டு கூட ஜெயிக்க மாட்டோம்; டெபாசிட் கூட பிடிக்க மாட்டோம் என்று கூறினீர்கள். இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் முதல்வர் விஜய் இருக்கிறார். முதல்வர் விஜய் எல்லா மதத்தையும் மதிப்பார். எல்லா கடவுளையும் மதிப்பார். அவர் எல்லாருக்கும்மான தலைவர்; அவரை ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குள் அடைக்க முடியாது. எம்மதமும் சம்மதம் என்று சொல்வார்கள். எங்கள் தலைவர் எம்மதமும் நம்மதம் என்று நினைக்கக் கூடியவர். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.