ஆன்மிக நகரத்தில் பெருகும் அசிங்கங்கள் !

கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த போலீசார் இரண்டு கார்களில் வந்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகில், இரட்டை பிள்ளையார் கோவில் தெருவிலுள்ள சிவா ரெசிடென்சி என்கிற லாட்ஜில் செப்டம்பர் இரண்டாம் தேதி இரவு திடீரென ஆய்வு செய்தனர். இதுகுறித்து கர்நாடக காவல்துறை தரப்பில் நாம் விசாரித்தபோது, திருப்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்துகொண்டிருந்த திருவண்ணாமலை அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்துள்ளார். இது தெரிந்த அந்த சிறுமியின் குடும்பத்தார், அச்சிறுமியை மைசூரிலுள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்துள்ளனர். அங்கு சென்ற அந்த இளைஞன், அச்சிறுமியை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தி லேயே திருப்பூர், சேலம், திருவண்ணாமலை என அங்கங்கு ரூம் எடுத்து தங்கியுள்ளான். பின்பு கர்நாடக போலீசார் இவர்களை கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். அந்த சிறுமி தந்த வாக்குமூலத்தில், தாங்கள் எங்கெங்கே தங்கினோமென்று கூறி யுள்ளார். வாக்குமூலத்தில் சொன்ன இடங் களுக்கு கர்நாடக போலீசார் நேரில் சென்று ஆதாரங்களை சேகரிக்கின்றனர். இதற்காகவே திருவண்ணாமலை வருகை தந்துள்ளனர்.
16 வயது சிறுமியிடம் எந்த ஆவணமும் வாங்காமல் சிவா லாட்ஜில் காதலனோடு தங்க ரூம் தந்துள்ளார்கள். இது கர்நாடகா போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து அந்த லாட்ஜ் உரிமையாளரான விமல் சிவஞானத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரோ தனது மேலாளரை கைகாட்டியுள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்டு புறப்பட்டனர்.
ஆன்மிக நகரான திருவண்ணாமலைக்கு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவைச் சேர்ந்த 70 சதவீதம் பேர் வருகின்றனர். சமீப காலங்களாக இளையோர்கள் குருப், குரூப்பாக வருகின்றனர். இங்கு வருபவர்கள் ஆன்மிகத் துக்காக வருகிறார்களா? ஆசையை பூர்த்தி செய்ய வருகிறார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது இச்சம்பவம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், "பக்தர்கள் தினமும் ஆயிரக் கணக்கில் வருவதால் கடந்த சில ஆண்டுகளில் தேவைக்கு அதிகமாகவே தங்கும் விடுதிகள் உருவாகிவிட்டன. அதைவிட அதிகமாக ஹோம்ஸ்டேக்கள் உள்ளன. ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையம், சன்னதி தெரு, பெரிய தெரு ஆகிய இடங்களில் 40, 50 புரோக்கர்கள் இருசக்கர வாகனங்களில் சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள். கையில் பெட்டி அல்லது ட்ராவல் பேக் வைத்திருந் தாலே அவர்களிடம், "ரூம் வேண்டுமா? ரூம் வேண்டுமா?' எனக்கேட்டு டார்ச்சர் செய் கிறார்கள். ரூம் புக்கானால் போதுமென நினைப்பவர்கள், எந்த ஆவணமும் வாங்குவ தில்லை. லாட்ஜ்கள், ஹோட்டல்களில் தங்குபவர்களிடம் குறைந்தபட்சம் ஆதார் கார்டு வாங்குகிறார்கள். ஹோம் ஸ்டேக்களில் அதுகூட வாங்குவதில்லை. அவர்கள் கணவன் மனைவியா, காதலர் களா, நண்பர்களா, கள்ளக்காதலர்களா என எதுவும் தெரிவதில்லை. அதேபோல் கோவிலை சுற்றி சாதிக்கொரு சத்திரங் கள் உள்ளன. அவை திருமண மண்டபங் களாக மாறியுள்ளன. இப்போது அவை பக்தர்களை தங்கவைக்கும் மையங்களாகியுள்ளன. பக்தர்களிடம் தலைக்கு 200 அல்லது 300 வாங்கிக்கொண்டு எந்த ஆவணங்களும் வாங்காமல் தங்கவைக்கிறார்கள்.
சிவகாசி நாடார் மடத்தில் தங்கிய ஆந்திராவை சேர்ந்த ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவரின் முகவரி தெரியாமல் போலீஸ் தடுமாறியது. பணம் தந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இப்படிப்பட்ட லாட்ஜ்கள், ரெசிடென்ஸிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். லாட்ஜ்கள், ரெசிடென்ஸிகள், ஹோட்டல்களில் தினமும் ஓ.சி அறை, ஓ.சி. உணவு என வாங்குவதால் அங்கு நடக்கும் அத்துமீறல்களை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்கிறார்கள்.
இதுகுறித்து பா.ஜ.க.வை சேர்ந்த கோவில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில துணைத்தலைவரும், வழக்கறிஞருமான சங்கரிடம் கேட்டபோது, "கடந்த 5 ஆண்டுகளில் திருவண்ணாமலை கோவிலுக்கும், கிரிவலத்துக்கும் வரும் வெளிமாநில பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்களை குறிவைத்து புதுப்புது ஹோட்டல்கள், லாட்ஜ்கள், ஹோம்ஸ்டேக்கள் உருவாகியுள்ளன. இதுகுறித்த டேட்டா எந்த துறையிட மும் கிடையாது. பாலியல் தொழில் செய்பவர்களும், போதைப்பொருள் விற்பவர்களும், சமூக விரோதிகளும் திருவண்ணாமலைக்குள் பக்தர் களோடு பக்தர்களாக வருகிறார்கள். அவர்கள் எங்கு தங்கினாலும் காவல்துறைக்கு தெரிய வாய்ப்பேயில்லாததால் நடவடிக்கை எடுப்பது சவாலானது. அதைத் தடுக்காவிட்டால் ஆன்மிக நகரம், ஆபாச நகரமாகிவிடும். இதைத் தடுக்க கூட்டு முயற்சி வேண்டும். வி.ஏ.ஓ.க்கள், கிராம சிப்பந்திகளுக்கு யார், யார் எந்த தெருவில் இருக்கிறார்கள் எனத்தெரியும். எந்தெந்த வீட்டில் குடும்பம் நடத்துகிறார்கள், ஹோம் ஸ்டேக்களாக நடத்துகிறார்கள் எனத்தெரியும். அதுபற்றிய தகவலை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவித்து கமர்ஸியல் வரி போடச்சொல்லவேண்டும்.
ரெசிடென்ஸிகள், லாட்ஜ்கள், ஆஸ்ரமங்கள் குறித்து முழுமையான பட்டியலை காவல் நிலையங்களுக்கு தந்து, அறையெடுத்துத் தங்குபவர்களின் முழு விபரங்களும் பதிவு செய்யவேண்டுமென்று காவல்துறை கடுமையாக உத்தரவிடவேண்டும். அப்போதுதான் யார் வருகிறார்கள்? எதற்காக வருகிறார்கள்? எனத் தெரியும், கண்காணிக்கவும் முடியும். இல்லையேல் வருங்காலத்தில் பல சிக்கல்களை சந்திக்கவேண்டி வரும்'' என்கிறார். ஆன்மிக நகரில் நடக்கும் குற்றங்களைத் தடுப்பார்களா?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)