Crime, law and justice
ஆண் நண்பருடன் ரீல்ஸ் செய்த மகள்; மகனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற தந்தை; குஜராத்தில் கொடூரம்
In Gujarat, a father and brother were apprehended after taking the daughter—who had posted 'Reels' with her boyfriend—to a secluded spot, beating her to death with a hammer, and dumping her body on the road.

குஜராத்தில் ஆண் நண்பருடன் சேர்ந்து ரீல்ஸ் வெளியிட்ட மகளைத் தனியாக அழைத்துச் சென்று சுத்தியலால் அடித்துக் கொலை செய்து ரோட்டில் போட்ட தந்தையும், சகோதரனும் பிடிபட்டனர்.
குஜராத் மாநிலம் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்த சோபியா பரூக்(22) என்ற பெண், மூன்று மாதங்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது.
அப்பெண் தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக இருந்தார். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அப்பெண்ணின் தந்தை மொகமத் பரூக் தனது மகளுடன் இது தொடர்பாக சண்டையிட்டார். மேலும் அவர் காதலிக்கும் நபருடன் பேசக்கூடாது என்றும் தெரிவித்தனர். ஆண்களிடமே பேசக்கூடாது என்று அப்பெண்ணின் சகோதரன் ஹபில் பரூக் தெரிவித்தார். ஆனாலும் அவர்கள் சோபியா மீது சந்தேகப்பட்டனர்.
எனவே குடும்பத்திற்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தி கொடுத்துவிடுவார் என்று கருதி அவரைக்கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்காக சோபியாவை அவரது தந்தையும், சகோதரனும் தனியாக கெல்ஜிபுரா என்ற இடத்திற்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்றவுடன் ஹபீல் பரூக் தான் தனது உடைக்குள் மறைத்து வைத்திருந்த இரும்பு சுத்தியலை எடுத்து சோபியாவின் தலையில் பின்புறம் ஓங்கி அடித்தார்.
இதற்கு மொகமத் பரூக் உதவி செய்தார். பின்னர் சோபியாவை இரண்டு பேரும் தூக்கிச்சென்று சாலையில் போட்டனர். அதனை விபத்து போன்று அரங்கேற்றம் செய்தனர். அவர்கள் ஹபிலுடன் சோபியா இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம வாகனம் ஒன்று வந்து பின்புறமாக இடித்துவிட்டு சென்றுவிட்டதாக இருவரும் போலீஸில் தெரிவித்தனர். சோபியாவின் தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவரை போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்திருந்தார். இது குறித்து ஆரம்பத்தில் விபத்து மரணமாகத்தான் போலீஸார் கருதினர். ஆனால் போலீஸார் நடத்திய விசாரணையில் இது கொலை என்று தெரியவந்தது. சமுதாயத்தில் குடும்பத்தின் கெளரவத்தைக் காப்பாற்ற இது போன்று இரண்டு பேரும் சேர்ந்து இக்கொலையைச் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
