Crime, law and justice
ஆண்களுடன் சகஜமாக பேசிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. தந்தை, சகோதரன் கூட்டாக செய்த கொடூரம்

குஜராத்தில் ஆண்களுடன் சகஜமாக பேசி வந்த பெண்ணை, குடும்ப கௌரவத்தை கெடுத்து விடுவார் என கூறி, தந்தையும், சகோதரனும் சேர்ந்து சுத்தியலால் அடித்துக் கொன்றுள்ளனர்.
குஜராத் மாநிலம் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்தவர் சோபியா பரூக். 22 வயதான இவர், தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோ வைரலான நிலையில், சோபியாவுக்கு வீட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
அப்பெண்ணின் தந்தை மொகமத் பரூக் தனது மகளுடன் இது தொடர்பாக சண்டையிட்டுள்ளார். மேலும் அவர் காதலிக்கும் நபருடன் பேசக்கூடாது என்றும் எச்சரித்திருக்கிறார். ஒரு படி மேலே போய் ஆண்களிடமே பேசக்கூடாது என சகோதரர் ஹபீல் பரூக்கும் தடைபோட்டிருக்கிறார். ஆனால், சோபியா தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதாக குடும்பத்தினர் சந்தேகித்துள்ளனர்
இதனால் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படும் என கருதிய தந்தையும் மகனும், சோபியா மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர். குடும்பத்தினரின் பேச்சைக் கேட்காத பெண் இருந்தால் என்ன? செத்தால் என்ன? என ஆவேசம் அடைந்த தந்தையும் மகனும், சோபியா தங்கள் வீட்டு பெண் என்பதையும் மறந்து அவரைத் தீர்த்துக் கட்ட திட்டம் போட்டுள்ளனர். இதற்காக திட்டம் போட்ட அவர்கள் சம்பவத்தன்று சோபியாவை கெல்ஜிபுரா பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்
அங்கு சென்றதும், சகோதரர் ஹபீல் பரூக் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு சுத்தியலை வெளியே எடுத்திருக்கிறார். சோபியா எதிர்பார்த்திராத நேரத்தில் அவரது தலையின் பின்புறம் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் படுகாயமடைந்த சோபியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்து விட்டார். .மகளை கொலை செய்ய சகோதரருக்கு தந்தையும் உதவியதாக கூறப்படுகிறது
கொலைக்கு பின்னர் இருவரும் சேர்ந்து சோபியாவின் உடலை தூக்கிச் சென்று சாலையில் போட்டு ஏதோ விபத்தில் உயிரிழந்தது போன்று செட்டப் செய்துள்ளனர். பின்னர், போலீசாரை நம்ப வைக்க அடுத்த கட்ட நாடகத்தையும் அரங்கேற்றியுள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததும் கண்ணீர் விட்டு கதறி அழுது நாடகமாடிய சகோதரன் ஹபீல், தானும் தனது சகோதரியும் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மர்ம வாகனம் ஒன்று பின்புறமாக வந்து மோதிவிட்டு சென்றதாக வாய் கூசாமல் பொய் சொல்லியிக்கிறார்.
அதைக் கேட்ட போலீசாரும், இது ஏதோ சாலை விபத்து மரணம் என்றே ஆரம்பத்தில் நினைத்திருந்தனர். ஆனால், விசாரணை அடுத்தடுத்து நகர்ந்தபோது தான் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட இடத்தில் விபத்து நடந்ததற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை.
இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் தந்தை மற்றும் சகோதரரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்ட போது தான் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்கு வந்தது. விபத்து என நாடகம் போட்டு தப்பிக்க நினைத்த தந்தையும், சகோதரனும் தற்போது போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளனர். கௌரவம் கௌரவும் என டயலாக் பேசி சொந்த சகோதரியையே தீர்த்துக் கட்டிய கொடுமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
