Politics
கருக்கலைப்பு... உயிரின் மதிப்பு Vs பெண்ணின் உரிமை உலகளாவிய விவாதம் முற்றுப்பெறுமா?

`பெண்கள் தானாக முன்வந்து கருக்கலைப்பு செய்வது முற்றிலும் தவறானது. அத்தகைய உரிமைகள் பெண்களுக்குத் தடை செய்யப்பட வேண்டும்...' - சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பேரணி மற்றும் கூட்டத்தில் இந்தக் கருத்தைப் பலரும் முன்வைத்தனர். தமிழக சட்டப் பேரவை தலைவர் அதில் கலந்துகொண்டதும் அந்தக் கருத்துக்கு ஆதரவாகப் பேசியதும் சர்ச்சைக்குள்ளானது.
இத்தகைய குரல்கள் உலகெங்கும் சில நூற்றாண்டு களாகவே கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. `எனது உடல், எனது உரிமை' என கருக்கலைப்பு செய்வதற்கு ஆதரவாக Pro-choice எனப்படும் ஒரு கூட்டம்... கருக்கலைப்பு `கொலை செய்வதற்குச் சமம்' என Pro-life எனப்படும் இன்னொரு கூட்டம். சண்டைகள் அந்தந்த நாட்டின் நீதிமன்றங்கள் மற்றும் நாடாளு மன்றங்களில் நடைபெற்று வெவ்வேறு விதமான சட்டங்களும், தீர்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.
போராட்டங்களும், சர்ச்சைகளும்!
கருக்கலைப்பு பற்றிப் பேசுவதற்கு முன் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். பெண் சிசுக்கொலை அல்லது கருவில் இருப்பது பெண் குழந்தை என்று அறிந்து அந்தக் காரணத்துக்காக கர்ப்பத்தைக் கலைப்பது... இவை எந்த வகையிலும் ‘பெண்ணின் தேர்வு உரிமை’ என்று நியாயப்படுத்த முடியாதவை. பெண் குழந்தையை வேண்டாம் என்ற குடும்ப, சாதி, பொருளாதார அழுத்தத்தின் விளைவாக நடைபெறும் பாலினத் தேர்வு ஒரு வெளிப்படையான பாலினப் பாகுபாடு. அதனால்தான் இந்தியாவின் சட்டங்கள் கருவின் பாலினத்தைத் தெரிவிப்பதையும், பாலினத் தேர்வையும் தடை செய்கின்றன.
உரிமை யாரிடம்?
கருக்கலைப்பு விவாதத்தின் இரு முனைகளும் உணர்ச்சிமிக்கவை. ‘Pro-life’ தரப்பின் கேள்வி எளிதானது. உருவாகத் தொடங்கிய உயிருக்குப் பேச முடியாது என்பதற்காக அதன் உரிமையை யார் மறுக்க முடியும்? கருவில் உருவாகும் குழந்தைக்குத் தனித்துவமான மரபணு அமைப்பு உள்ளது. அது வளர அனுமதிக்கப்பட்டால் மனிதக் குழந்தையாகப் பிறக்கும். ஆகவே, தாயின் சிரமம் மட்டுமே ஓர் உயிரை முடிப்ப தற்கான காரணமாக இருக்கக் கூடாது என்கிறார்கள். சமூகமே கர்ப்பிணிக்குப் பணம், மருத்துவம், தத்தெடுப்பு வாய்ப்பு, குடும்ப ஆதரவு ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும் என்பதும் இந்தத் தரப்பின் வாதம்.
‘Pro-choice’ தரப்பு வேறு இடத்தில் கேள்வி யைத் தொடங்குகிறது. கருவை ஒன்பது மாதங்கள் சுமப்பது சட்டமோ, மதமோ, அரசியல்வாதியோ அல்ல... ஒரு பெண்ணின் உடல். பாலியல் வன் முறை, உடல்நலத்துக்கு ஆபத்து, கரு குறைபாடு, குடும்ப வன்முறை, வறுமை... இவற்றில் ஒன்றுக்குக்கூட வெளியில் இருப்பவர் முழு தீர்ப்பு சொல்ல முடியுமா? `கருக்கலைப்பு நல்லது' என்பதல்ல இவர்களின் மைய வாதம். `அந்த முடிவை எடுக்கும் உரிமை யாரிடம் இருக்க வேண்டும்?' என்பதே. அந்தப் பொறுப்பை யார் ஏற்க வேண்டும் என்பதும் கேள்வியே. அதுவே இதை தனிநபர் சுதந்திரத்தின் கேள்வி யாக மாற்றுகிறது... `என் உடல், என் உரிமை' என்ற வாதத்தை முன்வைக்கிறது.
இந்த விவாதத்தை சட்டமாக மாற்றிய மிகப் பெரிய நாடகம் அமெரிக்காவில் நடந்தது. 1973-ல் ‘Roe v. Wade’ தீர்ப்பு, தனியுரிமை பாது காப்பின் கீழ் கருக்கலைப்புக்கு நாடு முழுவதும் அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலம், அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்கு சட்டப் பாதுகாப்பாக அந்தத் தீர்ப்பு இருந்தது. ஆனால், 2022-ல் ‘Dobbs v. Jackson Women’s Health Organization’ வழக்கில் உச்ச நீதிமன்றம் ‘Roe v. Wade’ தீர்ப்பை ரத்து செய்தது. `அரசியலமைப்பில் கருக்கலைப்புக்கான உரிமை இல்லை. அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யட்டும்' என்றது. அதிலிருந்து பெண்களின் உரிமை, மாநில எல்லைகளோடு மாறத் தொடங்கியது.
ஜனநாயக வெற்றியா... சமத்துவப் பிரச்னையா?
சில அமெரிக்க மாநிலங்களில் கருக்கலைப்பு, சட்டப் பாதுகாப்புடன் கிடைக்கிறது. டெக்சாஸ், ஓக்லஹோமா போன்ற மாநிலங்களில் கடுமையான தடைகள் உள்ளன. ஒரு பெண் வசிக்கும் ஊர்கூட அவளுடைய மருத்துவத் தேர்வைத் தீர்மானிக்கிறது. Pro-life இயக்கம் இதை ஜனநாயக வெற்றி என்கிறது. மாநில அரசுகள் தங்கள் மக்களின் மதிப்புகளின்படி சட்டம் செய்யலாம். Pro-choice தரப்பு இதையே சமத்துவப் பிரச்னை என்கிறது. பயணம் செய்ய பணம் உள்ளவருக்கு ஓர் உரிமை... இல்லாதவருக்கு வேறு சட்டம் என்றால் அது உண்மையான சுதந்திரமா என்ற கேள்விகள் எழுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகள் ஆரம்ப கர்ப்ப காலத்தில், குறிப்பிட்ட வார வரம்புக்குள், காரணம் எதுவாக இருந்தால்கூட கருக்கலைப்பை அனுமதிக்கின்றன. பிரான்ஸ் கருக்கலைப்பு சுதந்திரத்துக்கு அரசியலமைப்பு சிறப்புப் பாதுகாப்பே கொடுத்துள்ளது. போலந்து, மால்டா போன்ற நாடுகள் இன்னமும் கடுமையான கட்டுப்பாடுகளை வைத்துள்ளன. சில நாடுகளில் கட்டாய ஆலோசனை, காத்திருப்புக் காலம் போன்ற தடைகளும் உள்ளன.
ஆசியாவில் இன்னும் பலவித நிலைப்பாடுகள்... ஒரே ஆசியக் கலாசாரம் என்ற ஒன்று இங்கே இல்லை. மதம், சட்ட வரலாறு, மருத்துவ வசதி, பெண்களின் சமூக நிலை எல்லாமே சட்டத்தை வடிவமைக் கின்றன.
மதங்களுக்கேற்ப மாறும் பதில்கள்!
இந்துமதச் சிந்தனையில், கருவில் உள்ள உயிருக்கும் மதிப்பு உண்டு. உயிருக்குத் தீங்கு செய்யாமை என்ற கொள்கையின் அடிப்படை யில், அதை அழிப்பது முக்கியமான ஓர் அற நெறிக் கேள்வியாகப் பார்க்கப்படுகிறது. தாயின் உடல்நலம், வாழ்க்கைச்சூழல், குடும்பநிலை ஆகியவற்றைப் பொறுத்து பார்வைகள் மாறு கின்றன. இதற்கு இந்து மரபில் ஒரே அதிகாரபூர்வ முடிவு இல்லை. அதுவே இந்து மத அணுகுமுறையை சூழல் சார்ந்ததாக மாற்றுகிறது.
கத்தோலிக்க திருச்சபை கருவுறுதல் தொடங்கிய தருணத்திலிருந்தே மனித உயிர் முழுமையான பாதுகாப்புக் குரியது என்கிறது. மனித உரிமைகளுக்காகவும் போர் களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் முற்போக்குச் சிந்தனையாளர் என அறியப் படும் தற்போதைய போப் லியோ XIV-வும் இதைத் தொடர்கிறார். பல கிறிஸ்தவ அமைப்புகளும் (சென்னை உட்பட) இதே கோட்டில் இருக்கின்றன.
இஸ்லாமிய மரபில் கருவின் உயிருக்கு மதிப்பு உண்டு. ஆனால், 120 நாள்களுக்குப் பிறகு கருவுக்கு ஆன்மா சேர்கிறது என்ற நம்பிக்கையைப் பற்றியும், அதற்கு முன் கருக் கலைப்பு எப்போது அனுமதிக்கலாம் என்பதிலும் இஸ்லாமிய அறிஞர்களிடையே கருத்து வேறு பாடுகள் உள்ளன. தாயின் உயிருக்கு ஆபத்து என்றால் விதிவிலக்கும் ஏற்கப்படுகிறது.
இந்திய சமூகத்தில் பெண்சிசுக் கருக்கலைப்பு போன்ற கொடுமைகள், `Choice' என்ற சொல்லுக்கே இன்னொரு சோதனையை உருவாக்குகின்றன. பெண் குழந்தை வேண்டாம் என்று குடும்பம் அழுத்தி எடுத்த முடிவும், ஒரு பெண் தன் உடல்நலத்துக்காகச் சுயமாக எடுத்த முடிவும் ஒன்றல்ல. தேர்வு உண்மையில் அவளுடையதா என்பதே முக்கியம்.
Pro-life தரப்பின் ஒருவித அச்சத்தையும் எளிதாக ஒதுக்கிவிட முடியாது. சட்டம் மிகத் தளர்வானால், வளர்ந்து வரும் கருவின் மதிப்பு குறைக்கப்படுமா? மாற்றுத் திறனுடன் பிறக்கக் கூடிய குழந்தைகள், பெண் குழந்தைகள் போன் றோருக்கு `விரும்பத்தகாத வாழ்க்கை’ என்ற பார்வை உருவாகுமா? என எத்தனையோ கேள்விகளுக்கு விடையில்லை. இந்தியாவில் பாலினத் தேர்வு கருக்கலைப்பு தடை செய்யப் பட்டிருப்பதிலும் இந்த எச்சரிக்கை இருக்கிறது. பெண்ணின் தேர்வு என்ற பெயரில் குடும்பம், கணவன் அல்லது சமூகமே அவளை கருக் கலைப்புக்கு அழுத்தினால், அது ‘Choice’ அல்ல; மற்றொரு கட்டாயம். Pro-choice என்பதும் கட்டுப்பாடற்ற கருக்கலைப்பு என்று பொருள் அல்ல. அதன் அடிப்படை சுதந்திரமான, தகவலறிந்த முடிவு, பெண்களே எடுக்கும் முடிவு.
கருக்கலைப்பை சட்டத்தில் தடை செய்துவிட்டால் அது மறைந்து விடுமா? உலக சுகாதார நிறுவனம் புள்ளி விவரங்கள் சொல்லும் செய்தி வேறு - பாதுகாப்பான சேவையை அணுக முடியாத பெண்கள் ஆபத்தான முறை களுக்குச் செல்லும் வாய்ப்பு அதிகரிக்கிறது. உலகளவில் நடைபெறும் கருக்கலைப்பு களில் சுமார் 45 சதவிகிதம் பாதுகாப்பற்றவை என அந்த நிறுவனம் மதிப்பிடுகிறது. சட்டத்தின் நோக்கம் உயிரைக் காப்பது என்றால், ஒரு கருவைக் காக்கும் முயற்சி பெண்ணின் உயிரை ஆபத்தில் தள்ளும் அமைப்பாக மாறிவிட்டால்?
கருவில் வளரும் உயிருக்கும் மதிப்பு உண்டு, யாரும் மறுக்கவில்லை. அதே நேரத்தில், ஒரு பெண்ணின் உடலும் வாழ்க்கையும் அவளுடையவை. அவளுக்கு மட்டுமே உரிமை யானவை. எல்லோருக்கும் ஒரே சூழ்நிலை இருக்காது. அதனால், மருத்துவ ஆலோசனை யுடன் இறுதி முடிவை எடுக்கும் உரிமை அந்தப் பெண்ணிடமே இருக்க வேண்டும்.
அவளுக்கு பதிலாக அவளுக்கான அந்த முடிவை வேறு யார் எடுக்க முடியும்?
