கிராபைட் ஊழியர்களுக்கு சலுகை ரத்து
சிவகங்கை: சிவகங்கை அருகே கோமாளிபட்டி கிராபைட் ஆலை ஊழியர்களுக்கான வாகனம், சோப்பு, தேங்காய் எண்ணெய், கேன்டீன் உள்ளிட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டதால் தவித்து வருகின்றனர்.
கோமாளிபட்டியில் தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் கீழ் 'கிராபைட்' ஆலை செயல்படுகிறது.
இங்கு மேலாளர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை 100 பேர் வரை பணிபுரிகின்றனர். இங்கு எடுக்கப்படும் கிராபைட் துகள் சுத்திகரிக்கப்பட்டு விமான உதிரி பாகங்கள், பென்சில், தங்க நகை உருக்கும் குடுவை போன்றவை தயாரிக்க பயன்படுகிறது.
3000 டன் துகள் தேக்கம் கடந்த ஆறு மாதங்களாக இங்கு தயாரித்த ரூ.21 கோடி மதிப்பிலான 3,600 டன் துகள் மூடை தேங்கியது குறித்து சிவகங்கை வந்த அமைச்சர் பிரபுவிடம் தெரிவிக்கப்பட்டது. மறுநாளே கிராபைட் ஆலையில் தேங்கி கிடந்த மூடைகளை பார்வையிட்டு, விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதற்கு பின் 600 டன் மட்டுமே தற்போது எடுத்து செல்லப்படுகிறது. இன்னும் 3 ஆயிரம் டன் கிராபைட் துகள்கள் தேங்கி கிடக்கின்றன.
ஊழியர்களுக்கான வாகன நிறுத்தம் சிவகங்கையில் இருந்து 11 கி.மீ., துாரத்தில் உள்ள கோமாளிபட்டி கிராபைட் ஆலைக்கு சென்று வர ஊழியர்களுக்கென வாடகை வேன் இயக்கப்பட்டு வந்தது. வேனுக்கு கடந்த 3 மாத வாடகை ரூ.6 லட்சம் வரை பாக்கி வைத்துள்ளனர். இதனால் வேன் நிறுத்தப்பட்டு, கிராபைட் ஆலை சரக்கு வேனில் ஊழியர்கள் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
ஆண் டுக்கு ரூ.12 கோடி லாபம் வந்த போதும், ஊழியர்களுக்கு நாளுக்கு ரூ.25 மதிப்பில் உணவு வழங்கும் கேன்டீனையும் நிறுத்தி விட்டனர். சோப்பு, தேங்காய் எண்ணெய் போன்ற சலுகையையும் நிறுத்திவிட்டனர். இதனால் கிராபைட் ஆலை ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.
ஆலை நிர்வாகம் நல்ல லாபத்தில் இருக்கும் போதும் ஊழியர்களுக்கான சலுகைகளை ரத்து செய்தது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.