Politics
அரசு மருத்துவமனையில் புதிய மின் இணைப்பு பெற முடியாமல் தவிப்பு கலெக்டர் தலையிட்டும் தீராத பிரச்னை
கம்பம்: சின்னமனூர் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கட்டிய புதிய கட்டடத்திற்கு மின் இணைப்பு பெறுவதில் இடியாப்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. கலெக்டர் தலையிட்டும் பிரச்னை தீரவில்லையே என மருத்துவமனை பணியாளர்கள் புலம்புகின்றனர்.
சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு சின்னமனூர் மட்டுமின்றி சுற்றி உள்ள 30 கிராம பொதுமக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். மேகமலை பகுதியில் உள்ள 7 மலைக் கிராம மக்களும் இம் மருத்துவமனையை நம்பி உள்ளனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் 15 வது நிதிக் குழு மானியத்தில் ரூ.3.50 கோடியில் இம் மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது.
மின் இணைப்பு வழங்க மறுப்பு இது போன்ற கட்டடங்களை பொதுப்பணித் துறையின் கட்டட பிரிவு கட்டும். ஆனால் இக் கட்டடத்தை சின்னமனூர் நகராட்சி கட்டியது.
புதிய கட்டடத்திற்கு மின் இணைப்பு வழங்க மறுக்கின்றனர். புதிய கட்டடத்தை ஒப்படைக்கும் போது, மின் இணைப்புடன் தான் ஒப்படைக்க வேண்டும்.
ஆனால் நகராட்சி இப் பிரச்னையில் பின்வாங்குகிறது.
10 நாட்களுக்கு முன், புதிய கட்டடத்தை ஆய்வு செய்த கலெக்டர் வைத்தி நாதன், மருத்துவமனையில் ஏற்கெனவே உள்ள 5 மின் இணைப்புகளையும் ஒன்றாக இணைத்து, புதிய மின் இணைப்பு வழங்க மின்வாரியத்தை கேட்டுக் கொண்டார். கலெக்டர் முன்னிலையில் சம்மதித்த அதிகாரிகள், இப்போது தற்போது மின் இணைப்பு வழங்க முடியாது என்கின்றனர்.
மருத்துவ கருவிகள் பழுதாகும் அவலம் புதிய மின் இணைப்பு பெற்றுத்தர வேண்டிய நகராட்சி பொறியாளர், ஏற்கெனவே உள்ள பழைய இணைப்புக்களில் இருந்து மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என மருத்துவ அலுவலரிடம் கூறியுள்ளார்.
மருத்துவ அலுவலர் கூறுகையில்,' ஏற்கெனவே மின்சார லோடு தாங்காமல், மருத்துவமனையில் அடிக்கடி மின் தடங்கல் ஏற்படுகிறது. புதிய கட்டடத்திற்கும் பழைய இணைப்புகளில் இருந்து மின்சாரம் பெற்றால் மருத்துவ உபகரணங்கள் பழுதடையும் அபாயம் உள்ளது,' என்றார். இந்த கட்டுமான பணியினை பொதுப்பணித் துறை கட்டியிருந்தால் இப் பிரச்னை ஏற்பட்டிருக்காது என்கின்றனர். இதனால் தற்போது மின் இணைப்பு வழங்குவது இடியாப்ப சிக்கலில் மாட்டியுள்ளது.