Politics
"மு.க. ஸ்டாலினுடன் நானும் சிறை சென்றவன்; அப்போது விஜய்க்கு ஒரு வயது” – திருச்சி சிவா எம்.பி

திமுக எம்.பி. திருச்சி சிவா, மிசா குறித்துப் பேசுகையில், "மு.க. ஸ்டாலினுடன் நானும் சிறை சென்றவன். அப்போது விஜய்க்கு ஒரு வயது" என்றார்.
மிசா குறித்தான விவாதம் எழுந்துள்ள நிலையில், ”ஒரு பெரிய வரலாற்றை, அந்த வரலாற்று நேரத்திலே பங்கெடுத்த ஒரு தலைவரை இன்றைக்கு ஆட்சி பொறுப்புக்கும் அதிகாரத்திற்கும் வந்துவிட்டோம் என்ற காரணத்தினால் கொச்சைப்படுத்துவது நாகரிக அரசியல் கிடையாது” என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. திருச்சி சிவா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய், அவருடைய சகாக்கள் சட்டப்பேரவையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின், மிசாவில் கைதானதற்கு எந்தவிதமான சான்றுகளும் இல்லை என்று வரலாற்றை சரியாக தெரிந்து கொள்ளாமல் பேசுவது வேதனையாக இருக்கிறது. இன்று காலை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் அந்த வீடியோ என்பது மிகவும் கண்ணியமான முறையில் உண்மைகளை விளக்குவதாக அமைந்திருக்கிறது. அதை கூட கிண்டல் பேசினால் என்ன செய்வது என்று தெரியவில்லை.
எந்த பிம்பமும் உடையவில்லை. எங்களுக்கு இருப்பது உண்மையான உருவம் உண்மையான வரலாறு. 1975 ஜூன் 25ஆம் தேதி இந்திரா காந்தி, அவருடைய தேர்தல் வெற்றி செல்லாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், அவசர நிலையை அரசியல் சட்டத்தின் 352 வது பிரிவின் கீழ் பிரகடனம் செய்கின்றார். அந்த அவசரநிலை காலத்திலே, இந்திய நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் கிடையாது. ஊடகங்கள் யாரிடமும் பேட்டி எடுக்க முடியாது. பொதுக்கூட்டங்கள் நடத்த முடியாது. தங்களுக்கு தோன்றிய கருத்தை பத்திரிக்கைகள் சுதந்திரமாக எழுத முடியாது.
இந்த நிலையில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிறையிலே அடைக்கப்பட்டவர்களை நீதிமன்றத்திலே சென்று ஹேபியஸ் கார்பஸ் என்று தொடுக்கப்படக்கூடிய அடிப்படை உரிமை பறிக்கப்பட்டது. விசாரணை இல்லாமல் கொண்டு போய் சிறையில் அடைக்கலாம். நீதிமன்றத்தினுடைய தலையீடும் இருக்காது என்ற மோசமான நிலையின் போது அன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸோடு கூட்டணியில் இருந்தோம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 184 உறுப்பினர்கள் எங்களுடைய உறுப்பினர்கள். இதுவரை தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் பெற்றிடாத அந்த பெரிய இடத்தை பெற்ற கட்சி. 25ஆம் தேதி பிரகடனப்படுத்தப்பட்டதை 27ஆம் தேதியை அவசர நிலையை திரும்ப பெற்று தலைவர்களை விடுதலை செய்யுங்கள். ஜனநாயகத்தை நிலைநிறுத்துங்கள் என்று அதனை எதிர்த்து தீர்மானம் கழகத்தின் செயற்குழுவில் நிறைவேற்றி மாலையில் கடற்கரையிலே பொதுக்கூட்டம் நடத்தி மக்களையும் அந்த தீர்மானத்தை முன்மொழியச் செய்தோம்.
கூடுதல் தகவல் அப்போது இன்றைய முதலமைச்சருக்கு வயது ஒன்று. முதலமைச்சரின் அப்போதைய வயதை நான் குறைத்து சொல்வதாக யாரும் கருத வேண்டாம். நான் கல்லூரியில் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்தேன். நானும் சிறைக்கு சென்றேன். அவருடைய தியாகத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த தியாகத்தின் விளைவாகத்தான் நாடு விடுதலை பெற்றது. நீண்ட நெடுங்காலமாக என்று சொல்வதை போல அவசர நிலை காலத்தில் நடைபெற்றது ஜனநாயகத்தை காப்பதற்கான ஒரு போராட்டம்.
1976 ஜூன் 30ஆம் தேதி ஆளுநர் கே. கே ஷா தமிழ்நாட்டில் காந்திய வழியில் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்கிறார். மறுநாளே இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனது என அதே ஆளுநர் கையெழுத்து போட்டு, ஆட்சி கலைக்கப்பட்டது. பிப்ரவரி 1ல் இருந்து பல தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். முதலமைச்சராக இருந்த கலைஞர் வீட்டுக்கும் காவல் துறையினர் வருகிறார்கள். என்ன காரணத்திற்காக என்று அவர் கேட்கிற போது ஸ்டாலினை கைது செய்ய வந்தோம் என்கிறார்கள். அவர் பிரச்சாரத்திற்கு வெளியூர் சென்றிருக்கிறார். வந்தவுடன் நானே அழைக்கிறேன் என்று இரண்டாம் தேதி வந்தவுடன் கலைஞர் அழைத்து போலீசார் வந்து அவரை கைது செய்து வேனில் ஏற்றுவதும், தலைவர் உட்பட எல்லோரும் அவரை வழியனுப்புவதற்கும் புகைப்பட சான்றுகள் இருக்கின்றன.
சிறையிலே கைது செய்யப்பட்ட அடுத்த நாளே வார்டன்களும், ஆயுள் தண்டனை கைதிகளை கான்விக்ட் வார்டன்கள் என்பார்கள் அவர்களும் சேர்ந்து ஒவ்வொரு அரைக்கதவாக திறந்து உள்ளே இருந்தவர்கள் எல்லாம் அடிக்கிறார்கள். அடிபட்டவர்களில் இன்றைக்கு உயிரோடு இருப்பவர்கள் வீரமணி, ஆற்காடு வீராசாமி போன்றவர்கள் இருக்கிறார்கள். ஸ்டாலின், மீது விழுந்த அடிகளை வாங்குவதற்காக குறுக்கே விழுந்த அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு அந்த சிறைச்சாலையிலே உயிர் நீத்தார். அவர் டைரி குறிப்பாக எழுதி இருக்கின்றார்.
இந்தியாவில் ஒரு தீவு என்று கலைஞர் எழுதியதும் இருக்கிறது. பின்னாளில் எம்ஜிஆர் ஆட்சியில் நியமிக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷன் விசாரிக்கப்பட்டதும் இருக்கின்றது. அது பற்றி நாங்கள் நிறைய பேசியிருக்கிறோம். நிறைய நடந்திருக்கிறது. இப்பொழுதும் கூட பதட்டப்பட்டு நாங்கள் பேசவில்லை. அவர்கள் பாணியிலேயும் பேச விரும்பவில்லை. அது எங்களுடைய பழக்கமும் இல்லை.
ஒரு பெரிய வரலாற்றை, அந்த வரலாற்று நேரத்திலே பங்கெடுத்த ஒரு தலைவரை இன்றைக்கு ஆட்சி பொறுப்புக்கும் அதிகாரத்திற்கும் வந்துவிட்டோம் என்ற காரணத்தினால் கொச்சைப்படுத்துவது நாகரிக அரசியல் கிடையாது. எங்கள் தலைவரும் விளக்கம் சொல்லி இருக்கிறார். இப்பொழுது நானும் மக்களுக்கு விளக்கித்தான் சொல்கிறேன். ஒரு வருட காலம் நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம். எங்கள் தலைவருடைய உணர்வின் வழியில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று இதற்கு நிறைய ஆதாரங்களும் அடையாளங்களும் இருக்கின்றன. இவர்கள் இப்படி பேசியதன் மூலம் மக்களுக்கு இதை பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக தெரிவிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு எங்களுக்கு தந்தார்களே என்று நாங்கள் நன்றிதான் சொல்ல முடியுமே தவிர உங்களுக்கு என்ன தெரியும் உங்களுக்கு என்ன என்றெல்லாம் நாங்கள் பேச மாட்டோம்.
தகுதி இருக்கிறதா வரலாறு தெரியுமா என்றெல்லாம் நாங்கள் பேச விரும்பவில்லை. இப்படி அவர்கள் பேசிய காரணத்தினால் விளக்கம் சொல்லுகிற ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எங்களுக்கு தந்திருக்கிறார்கள் நாட்டு மக்களுக்கு மீண்டும் வரலாற்றை தெரிவிக்க இளைய தலைமுறையினர் அந்த காலத்திலே ஜனநாயகம் பாதிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு” எனத் தெரிவித்தார்.
