Lifestyle and human interest
அன்று ஹாக்கியை வேடிக்கை பார்த்த சிறுமி... இன்று தேசியப் போட்டிகளின் நடுவர்!

ஆறாம் வகுப்புல இருந்து ஹாக்கி விளையாட ஆரம்பிச்சேன். 7-ம் வகுப்புல பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி பிரிவில ஒரே வருஷத்துலயே மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விளையாட வாய்ப்பு கிடைச்சுது.
ஒரு காலத்தில் ஹாக்கி மைதானத்தை வேடிக்கை பார்த்தவர்... இன்று அதே மைதானத்தில் தேசியப் போட்டிகளுக்கு நடுவராக உருவெடுத்திருக்கிறார். வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் அரும்பருத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சோனியா. விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்த இவரது உயரத்துக்குப் பின்னால் இருப்பது திறமை மட்டுமல்ல; அவரைத் தட்டிக்கொடுத்த உடற்கல்வி ஆசிரியரின் நம்பிக்கையும் உழைப்பும்கூடத்தான்.
“அப்பாவும் அம்மாவும் விவசாயம் செய்து என்னைப் படிக்க வெச்சாங்க. நான் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில படிச்சேன். 6-ம் வகுப்புக்காக எங்க கிராமத்துக்குப் பக்கத்துல இருக்கிற காரணாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில சேர்ந்தேன். அந்தப் பள்ளியோட பி.டி சார்தான் மகேஷ். எங்க ஸ்கூல் மைதானத்துல சார் பயிற்சி கொடுத்து, மாணவர்கள் ஹாக்கி விளையாடிட்டு இருக்கிறதை வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன். அதைப் பார்த்து எனக்கும் விளையாடணும்னு ஆசை வந்துச்சு.
ஆறாம் வகுப்புல இருந்து ஹாக்கி விளையாட ஆரம்பிச்சேன். 7-ம் வகுப்புல பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி பிரிவில ஒரே வருஷத்துலயே மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விளையாட வாய்ப்பு கிடைச்சுது. அது இன்னும் நிறைய மேட்ச் ஆடணும்னு ஒரு நம்பிக்கையை உருவாக்குச்சு. அப்பல்லாம் வெளியூர்ல நடக்குற போட்டிகளுக்குப் போயிட்டு வர பணம் இருக்காது. அப்பவும் எங்க பிடி சார்தான் உதவி செய்வாரு. ஷூ, ஹாக்கி ஸ்டிக் தொடங்கி விளையாடத் தேவையான எல்லாமே வாங்கிக் கொடுத்தாரு. இப்ப காரணாம்பட்டு ஸ்கூல்ல படிச்ச நாலு பேர் நேஷனல் ஹாக்கி பிளேயரா உருவாகி இருக்கோம். எங்க பள்ளியில மட்டுமில்லாம, எங்க ஊர்லயும் ஸ்போர்ட்ஸ் டெலவப் ஆனதுக்கு ஒரே காரணம் மகேஷ் சார்தான்” எனும் சோனியா, பள்ளிப் படிப்பை முடித்த பிறகும் ஹாக்கியை விடவில்லை.
“ப்ளஸ் டூ முடிச்சதும் வேலூர், டி.கே.எம் மகளிர் கல்லூரியில பி.காம் சேர்ந்தேன். கல்லூரி சேர்ந்ததுக்கு அப்புறமும் தொடர்ந்து ஹாக்கி விளையாடினேன். ‘இதுக்கு அப்புறமும் எதுக்கு பொம்பளப் பிள்ளைய விளையாட அனுப்புறீங்க’னு என் பெற்றோர்கிட்ட நிறைய பேர் கேட்டாங்க. அதையெல்லாம் அவங்க கண்டுக்கவே இல்ல. ‘உனக்குப் பிடிச்சதைப் பண்ணு’னு தொடர்ந்து சப்போர்ட் பண்ணிட்டே இருந்தாங்க. அதுலயும் எங்க பாட்டி அம்சம்மாள், நான் ஒவ்வொரு மேட்ச்சும் ஜெயிச்சு மெடல் வாங்கிட்டு வரும்போது, ‘என் பேத்தி வாங்கினது’னு ஊரெல்லாம் காமிச்சு, பெருமையா சொல்லுவாங்க.
நான் காலேஜ் சேர்ந்த வருஷம் கொரோனா காரணமா எந்த விளையாட்டு நிகழ்வும் நடக்கல. செகண்ட் இயர் படிக்கும்போதுல இருந்து திருவள்ளூர் பல்கலைக்கழகம் சார்பா, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகள், பல்கலைக்கழக அளவிலான தேசிய டீம்லயும் ரெண்டு வருஷம் விளையாடினேன்” என்றவர் நடுவர் பணிக்கு தேர்வானது பற்றி பகிர்ந்தார்.
“பி.காம் முடிச்ச பிறகு சென்னை ஒய்எம்சிஏ கல்லூரியில இளங்கலை உடற்கல்வி (B.P.Ed) படிப்புல சேர்ந்தேன். ஹாக்கி நடுவர்களைத் தேர்வு செய்ய ‘ஹாக்கி இந்தியா’ என்ற தேசிய அளவிலான கூட்டமைப்பின் சார்புல தேர்வுகள் நடக்கும். மாவட்டம், மாநிலம், தேசிய அளவுலனு மூணு நிலைகள்ல தேர்வு நடத்துவாங்க.
ஒவ்வொரு கட்டத்துலயும் எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு நடக்கும். இந்தத் தேர்வுகளை எழுதி, தகுதி பெற்றா மட்டும்தான் தேசிய ஹாக்கி போட்டிகளுக்கு நடுவரா பணியாற்ற முடியும். மாவட்ட அளவுல தொடங்கி படிப்படியா தேசிய அளவிலான தேர்வு வரை எழுதி தகுதி பெற்றேன்.
மாவட்ட அளவில தொடங்கி, மாநில, தேசிய அளவிலான பள்ளி மாணவர்கள் சப் ஜூனியர், ஜூனியர் அணிகளுக்கான போட்டிகளுக்கு நடுவரா இருக்கேன். இந்தியால சுமார் 50 பெண் நடுவர்கள் இருக்காங்க. தமிழகத்துல என்னையும் சேர்த்து மொத்தம் ஆறு பேர் இருக்கோம்.
ஒவ்வொரு போட்டித் தொடர் தொடங்குறதுக்கு முன்னாடியும் ஃபிட்னெஸ் தேர்வு வைப்பாங்க. அதுல பாஸ் பண்ணினா மட்டும்தான் நடுவர் பணி செய்ய முடியும். அதுல பாஸ் பண்ணாட்டாலும், குறிப்பிட்ட போட்டித் தொடர்ல மட்டும் நடுவர் பணி செய்ய முடியும். அதுக்கு அடுத்த போட்டித் தொடருக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டாங்க. அதனால ஃபிட்னெஸ் லெவலை பராமரிச்சே ஆகணும். தினமும் காலை, மாலைனு அட்டவணை போட்டு, ஓட்டப் பயிற்சி முதலான தடகளப் பயிற்சிகளைச் செய்யுறேன். இதன் மூலமா உடல் சோர்வடையாம நீண்ட நேரம் போட்டியில நடுவரா பங்கேற்க முடியும்” எனும் சோனியாவுக்கு வயது 23. தற்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை உடற்கல்வி (M.P.Ed) படித்து வருகிறார்.
“காரணாம்பட்டு அரசு மேல் நிலைப் பள்ளி மைதானத்தை தினமும் சுமார் 150 பிளேயர்ஸ் பயன்படுத்திட்டு இருக்காங்க. மைதானத்தை விரிவுபடுத்தி, தேவையான வசதிகளை அரசு செய்துகொடுத்தா இன்னும் நிறைய வீரர்கள் உருவாகுவாங்க...”
