Economy, business and finance
வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே பூட்டிய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 19 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி தாலுகா, கண்டாச்சிமங்கலத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் மகாலிங்கம்,66; இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு திண்ணையில் படுத்து துாங்கினார். தொடர்ந்து, நேற்று காலை 5 மணியளவில் மகாலிங்கம் எழுந்து வீட்டிற்குள் சென்ற போது, பின் பக்க கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடன் வீட்டிற்குள் சென்று பார்த்ததில் அறையில் இருந்த பீரோவும் உடைந்து, அதில் இருந்த நகைகள் திருடுபோனது தெரிந்தது. இரவில் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த சூட்கேசினை திறந்து மோதிரம், தோடு, காசு என 19 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.11 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரிந்தது.
தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட மகாலிங்கம் மற்றும் அக்கம், பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு, வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.