சேதம் அடைந்த பாலாறு மேம்பாலம் விபத்து :அபாயத்தில் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாறு மேம்பாலம் சேதமடைந்துள்ளதால்,. வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் சென்று வுருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து, வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக செவிலிமேடு பாலாறு மேம்பாலம் உள்ளது. தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து சென்று வருகின்றன.
முறையான பராமரிப்பு இல்லாததால், மேம்பாலத்தின் இணைப்புப் பகுதிகள் மற்றும் பல இடங்கள் பெயர்ந்து பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
பாலம் சேதமடைந்திருப்பது தெரியாமல், வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் சிக்கி விழுந்து காயம் அடையும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
மேலும் கனரக வாகனங்கள் செல்லும்போது பாலம் அதிர்வதால், அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படுமோ என்ற பீதியிலேயே வாகன ஓட்டிகள் பாலத்தை கடக்கின்றனர்.
நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் பிரியதர்ஷினி கூறியதாவது:
பாலத்தின் சேதமடைந்த இணைப்புப் பகுதிகளில் கான்கிரீட் கலவை கொண்டு சீரமைக்கப்பட்டது. வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதாலும், கான்கிரீட் கலவை உலர்வதற்கு போதிய நேரம் கிடைக்காததாலும், போடப்படும் கலவை நிலைக்கவில்லை.
எனவே, பாலத்தை முழுமையாக சீரமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தேவையான நிதி கோரி அரசுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்.
நிதி ஒதுக்கீடு ஒப்புதல் கிடைத்தவுடன், பாலம் முழுமையாக சீரமைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.