குழந்தைகளிடையே பரவுகிறது கை, பாதம், வாய் நோய் பாதிப்பு
சென்னை: 'தமிழகத்தில், கை, பாதம், வாய் நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், பாதிக்கப்படும் குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்' என, பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில், தக்காளி காய்ச்சல் என்ற நோயால் ஏற்படும் பாதிப்பு, தமிழகத்தில், 'கை, பாதம், வாய் நோய்' என்பதாக உள்ளது. இந்த பாதிப்பு, தற்போது குழந்தைகளிடையே அதிகம் பரவி வருகிறது.
முதலில் காய்ச்சல் ஏற்பட்டு, பின் தொண்டையில், புண், கை, கால்கள், பாதங்களில் கொப்பளங்கள் மற்றும் அரிப்புடன், சிவப்பு நிறத்தில் மாறும்.
இது ஒரு வாரத்தில் குணமாகக் கூடியது என்றாலும், சில குழந்தைகளுக்கு கடுமையான நீரிழப்பு, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
குழந்தைகளை பாதிக்கும் இத்தொற்று, ஒரு குழந்தையிடமிருந்து, மற்ற குழந்தைகளுக்கு எளிதில் பரவக்கூடியது. எனவே, பாதிக்கப்படும் குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி கூறியதாவது:
இந்த வகை காய்ச்சல், பருவ கால தொற்று. இது, 'காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ 16' வகையை சார்ந்தது. இதனால், பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாது. இதே வகையை சார்ந்த, 'என்டிரோ வைரஸ் 71' ஏற்பட்டால், பாதிப்பு தீவிரமாக இருக்கும்.
தமிழகத்தில் பரவும் வைரஸ், மிதமாக பாதிப்புகளை ஏற்படுத்தி, ஒரு வாரத்திலேயே குணமாகி விடும். இந்நோய், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது.
காய்ச்சல், தொண்டை எரிச்சல், வாய் மற்றும் நாக்கில் புண், தலைவலி, கை, கால், முதுகுக்கு கீழ் மற்றும் பாதங்களில் கொப்பளங்கள் தோன்றுதல், பசியின்மை, தோலில் அரிப்பு, சிவப்பு நிறத்தில் தட்டையாக மாறுதல் போன்றவை இருந்தால், உடனடியாக உரிய சிகிச்சை பெற வேண்டும்.
இந்நோய், சளி, கொப்பளங்களிலிருந்து வரும் நீர், தொற்று போன்றவற்றின் வாயிலாகவும் பரவக்கூடியது. தினசரி இரண்டு முறை, குழந்தைகளை தண்ணீரால் துடைத்து விடுவதன் வாயிலாக, இந்நோய் வராமல் தடுக்கலாம். இந்நோய் குறித்த அச்சம் வேண்டாம்.
அதேநேரம், மற்ற குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க, ஒரு வாரம் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். பள்ளியில் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டால், அப்பள்ளியை முழுமையாக சுத்தம் செய்வதன் வாயிலாக, மற்ற குழந்தைகளுக்கு பரவுவதை தடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.