பத்திர எழுத்தரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., மனுதாக்கல்
திண்டுக்கல்: பழநி அடிவாரம் தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
சஸ்பெண்ட் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் 48, விழுப்புரம் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் 56, நிலம் வாங்கிய திருப்பூர் பாப்பன்குளம் வெள்ளைத்துரை 60, பழநி சேதுபதி 67, வழக்கறிஞர் அன்வர்தீன் 65, ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாஷ் 38, ஆகிய 6 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். அன்வர்தீன் உடல்நலக்குறைவால் மதுரை சிறையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் ஜஸ்டின் மணிகண்டன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரை ஒருநாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு திண்டுக்கல் முதலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆக.,19ல் அனுமதி வழங்கியது. விசாரணை முடிந்து இருவரையும் அன்று மாலை 5:30 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து வழக்கு தொடர்பான முக்கிய விபரங்கள் குறித்து பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாசிடம் விசாரிக்க போதுமான காலஅவகாசம் வேண்டும்.
அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என திண்டுக்கல் முதலாம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., தரப்பில் மனுதாக்கல் செய்தனர். கடந்த வாரம் இந்த மனுவை நீதிபதி பாக்கியராஜ் தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் ஜெயப்பிரகாைஷ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி நேற்று சி.பி.சி.ஐ.டி., தரப்பில் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
ஜாமின் மனு ஒத்திவைப்பு இவ்வழக்கில் கைதான சேதுபதி, வெள்ளத்துரை, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்தின் அறங்காவலர் முருகதாஸ் ஜாமின் மனுக்களை ஆக.31 ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. கைதான பத்திர எழுத்தர் ஒட்டன்சத்திரம் ஜெயபிரகாஷ் உயர்நீதிமன் றக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி கே.முரளிசங்கர் விசாரணையை செப்.10க்கு (நாளை) ஒத்திவைத் தார்.