Crime, law and justice
காலியாக உள்ள உயர் சிறப்பு மருத்துவ இடங்கள்.40! தமிழக அரசிடமே ஒப்படைக்க கோர்ட் உத்தரவு
-–சிறப்பு நிருபர்– தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ள, ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ எனப்படும், உயர் சிறப்பு
40! காலியாக உள்ள உயர் சிறப்பு மருத்துவ இடங்கள்... தமிழக அரசிடமே ஒப்படைக்க கோர்ட் உத்தரவு
தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ள, ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ எனப்படும், உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான 40 இடங்களை மாநில அரசிடமே ஒப்படைக்கும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான காலி இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு மாநில அரசு வழங்கியது. அகில இந்திய அளவிலான மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில், தமிழகத்தில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள 40 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அப்படியே தமிழக அரசிடம் ஒப்படைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘தமிழகத்தில் தற்போது 111 மருத்துவ மாணவர்கள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்காக காத்திருக்கின்றனர். எனவே, காலியாக உள்ள இடங்களை கலந்தாய்வு நடத்தி நிரப்பும் வகையில், ‘கட் – ஆப்’ மதிப்பெண்ணையும் மத்திய அரசு குறைக்க வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘காலியாக உள்ள மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை தமிழக அரசிடமே மீண்டும் ஒப்படைப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்’ என, உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு, ‘காலியாக உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை மத்திய அரசு ஒப்படைப்பதுடன், கலந்தாய்வு நடத்தி நிரப்பும் வகையில், மத்திய அரசு கட் ஆப் மதிப்பெண்ணை 30 சதவீதத்தில் இருந்து பூஜ்யமாக குறைக்க வேண்டும். கடந்த கல்வியாண்டிலும் மத்திய அரசு இந்த சலுகையை வழங்கியது’ என, தெரிவிக்கப்பட்டது.
‘கட் ஆப் மதிப்பெண் சதவீதத்தை குறைத்தால் மருத்துவ கல்வியின் தரம் குறைந்துவிடும். எனவே அதற்கு வாய்ப்பு இல்லை’ என, மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள 40 இடங்களையும், தமிழக அரசிடம் உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். குறைக்கப்பட்ட புதிய கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் இதற்காக மூன்று வார காலத்திற்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்க வேண்டும்.
காலியாக உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை நிரப்ப கட் ஆப் மதிப்பெண்ணை 30 சதவீதமாக குறைத்த மத்திய அரசின் முடிவை ஏற்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசு மருத்துவர்களுக்கான இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் நிரப்பப்படாமல் வீணாவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.