Politics
எரிவாயு தகன மேடை பயன்பாட்டிற்கு வருவது எப்போது? ரூ.1.47 கோடியில் கட்டப்பட்ட கட்டடம் வீணாகும் அவலம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை நகராட்சியில் 1.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை பயன்பாடுயின்றி வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உளுந்துார்பேட்டை நகராட்சி பகுதியில் இறந்த உடல்கள் சேலம் ரோட்டில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் அடக்கம் செய்வதும். விறகு கட்டைகளை கொண்டும் எரியூட்டியும் வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை நகராட்சி சார்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் நகராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு 1.47 கோடி ரூபாய். கடந்த தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து சேலம் ரோட்டில் உள்ள சுடுகாட்டு பகுதி அருகேயே கலைஞர் நகர்புற மேம்பட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2022-2023ம் ஆண்டு நவீன எரிவாயு தகன மேடைக்கான கட்டடம் கட்டப்பட்டது.
கட்டடத்தில் மின்சாதன பொருட்கள், மின் மோட்டார்கள் வாங்கி வைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிலையில் இருந்தது.
ஆனால் இந்த நவீன எரிவாயு தகன மேடையை பராமரித்து செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு எந்த தொண்டு நிறுவனங்களும் முன் வரவில்லை. இதனால் எரிவாயு தகன மேடை கட்டடம் கட்டப்பட்டு எந்தவித பயன்பாடுமின்றி கிடப்பில் உள்ளது.
கட்டடம் பயன்பாட்டில் இல்லாததால் அப்பகுதியில் முட்புதர்கள் மண்டி வருகிறது. இந்த கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் பாழடைந்து, 1.47 கோடியில் கட்டப்பட்ட கடடடம் பாழாகி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் நவீன எரிவாயு தகன மேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து நகராட்சி நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், 'நவீன எரிவாயு தகன மேடை கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனை பராமரித்து செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தொண்டு நிறுவனங்கள் தற்போது தான் முன்வந்துள்ளன.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும். அந்த கட்டட பகுதியில் இருந்த மின்சாதன பொருட்கள், மின் மோட்டார்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் உடைத்து திருடிச் சென்றுள்ளனர். இதனால் மின்சாதன பொருட்கள், மின் மோட்டார்கள் வாங்கி பொருத்தப்பட்டவுடன் நவீன எரிவாயு தகன மேடை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதற்கான நடவடிக்கைகள் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது' என்றார்.