Politics
கார்கே மேடை ‘சுத்திகரிப்பு சடங்கு’... 29 நாள்களுக்குப் பிறகே எஃப்.ஐ.ஆர்... சட்டம் சம்பிரதாயத்துக்கா?

`கார்கே ஒரு தலித் என்பதால் இத்தகு தீண்டாமை ‘சுத்திகரிப்பு’ மத சடங்கை நடத்தியுள்ளனர்’ என்று காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றிய பொதுக்கூட்ட மேடையில், அவர் தலித் என்பதால் ‘சுத்திகரிப்பு’ சடங்கு நடத்தப்பட்டது, தேசத்தையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. 29 நாள்களுக்குப் பிறகுதான், சம்பந்தப்பட்டவர்கள் மீது தற்போது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது, மேலும் அதிர்ச்சி தருகிறது.
என்ன நடந்தது?
கார்கேயின் பேரணி ஹல்த்வானியில் ஆகஸ்ட் 8 அன்று நடைபெற்ற நிலையில், ’சுத்திகரிப்பு’ சடங்கு ஆகஸ்ட் 10 அன்று நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 13 அன்று மாநிலங்களவையில் கார்கேவே இந்த விஷயத்தை எழுப்பி, தனக்கு தீண்டாமையின் கொடுமை நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார். அதற்கு மத்திய அமைச்சரும் அவைத் தலைவருமான ஜே.பி. நட்டா, ‘நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியிருந்தார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த ‘சுத்திகரிப்பு சடங்கை’ ஒரு செய்தியாளர் சந்திப்பில் `குற்றம்’ என்று விமர்சித்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
`கார்கே ஒரு தலித் என்பதால் இத்தகு தீண்டாமை ‘சுத்திகரிப்பு’ மத சடங்கை நடத்தியுள்ளனர்’ என்று காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இருப்பினும், அதை வழக்காகப் பதிவு செய்ய காவல்துறையினர் மறுக்கவே, காங்கிரஸ் எம்.பி-க்களும் மற்ற தலைவர்களும் டெல்லியின் நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்தில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக போராடினர். அதைத் தொடர்ந்து, இறுதியாக 29 நாள்களுக்குப் பிறகு, செப்டம்பர் 8 அன்று காவல்துறையினர் பி.என்.எஸ் சட்டத்தின் 196 மற்றும் 299 பிரிவுகள் மற்றும் பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் சட்டத்தின் 3(1)(r) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எம்.பி-க்கே இந்த நிலைமை என்றால் எளிய மக்களுக்கு?
“ஒரு காவல் நிலையத்தில் நாட்டின் எம்.பி-க்களையே இப்படி நடத்துகிறார்கள் என்றால், எந்தவொரு சாதாரண தலித், பழங்குடியினர் அல்லது விளிம்புநிலை நபருக்கு எதிராக அட்டூழியங்கள் நிகழ்த்தப்படும்போது, காவல்துறை அவர்களை எப்படி நடத்தும்? பட்டியல் சாதி பழங்குடியினர் சமூகங்களுக்கு எதிரான அட்டூழியங்களைத் தடுக்க நாட்டில் கடுமையான சட்டங்கள் இருக்கும்போது, ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய ஏன் ஒரு மாதம் ஆனது? இது ஒரு முதல் தகவல் அறிக்கை பற்றியது மட்டுமல்ல. இது நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்டம் ஒழுங்கின் நிலை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது” என்று காங்கிரஸைச் சேர்ந்த கெய்க்வாட் விமர்சித்தார்.
அமைச்சர் முதல் முதலமைச்சர் வரை!
இது ஹல்த்வானியில் புதிதாக தோன்றிய ஒரு தனிப்பட்ட சர்ச்சை அல்ல. இப்படிப்பட்ட ‘சுத்திகரிப்பு சடங்கு’ எதிர்க்கட்சி தலித் எம்.பி கார்கே மட்டுமல்லாது, தலித் முதலமைச்சர், தலித் அமைச்சர் எனப் பலருக்கும் நடந்துள்ளது. 1978-ல் மத்திய அமைச்சர் ஜெகஜீவன் ராம் திறந்துவைத்த சிலை `தூய்மைப்படுத்தப்பட்டதும்’, 2014-ல் பீகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் வருகையைத் தொடர்ந்து கோயில் `தூய்மைப்படுத்தப்பட்டதும்’ நடந்தன.
2024-ல் அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்வில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்காததும் சாதிப் பாகுபாடு குறித்த விவாதத்தை எழுப்பியது. முர்மு நாட்டின் முதல் குடிமகளாக இருந்தபோதிலும், சாதியக் காரணங்களால் அவர் நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப் படவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், முர்மு மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் அவர்களின் சாதிய பின்னணி காரணமாக முக்கிய நிகழ்வுகளில் புறக்கணிக் கப்பட்டதாக விமர்சித்தார். எனினும், ராமர் கோயில் அறக்கட்டளை தரப்பில் முர்முவுக்கு முறையான அழைப்பு வழங்கப்பட்டதாகவும், எனவே அவர் அழைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
வலுவான சட்டம் இருந்தும் நழுவிப்போகும் உரிமைகள்!
இந்தியாவில் தலித் மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான சட்டங்கள் பல உள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் Article 17, தீண்டாமையை ஒழித்து, அதை நடைமுறைப்படுத்துவதை குற்றமாக்குகிறது. மிக முக்கியமான பாதுகாப்புச் சட்டமாக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம், 1989 (Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989) உள்ளது. இதன் பிரிவு 3(1), SC/ST நபர்களுக்கு எதிரான பல்வேறு சாதி அடிப்படையிலான குற்றங் களைப் பட்டியலிடுகிறது.
குறிப்பாக பிரிவு 3(1)(r), பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தோரை பொதுமக்கள் பார்வையில் சாதிப் பெயர் அல்லது பிற வழிகளில் அவமதித்து, இழிவுபடுத்துவதை குற்றமாக்குகிறது. பிரிவு 3(1)(s) சாதிப் பெயரால் அவமதிப்பதையும் உள்ளடக்கு கிறது.
இப்படிப்பட்ட சட்டங்களும், அவற்றுக் கான தனி நீதிமன்றங்களும், சிறப்பு அரசு வழக்கறிஞர்களும், காவல் நிலையங்களும் இருந்தும் பொதுமக்கள் முதல் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் வரை வேறுபாடின்றி தீண்டாமை அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.
தீண்டாமைக்கு எதிராகச் சட்டம் மட்டும் போதாது. அது சம்பிரதாயமாக இருப்பது மட்டும் போதாது. சமூக மாற்றமும் அவசியம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
