Politics
கரூர் சம்பவத்தில் விஜய்தான் குற்றவாளி!
ஆளூர் ஷாநவாஸ் அப்படிச் சில கருத்துகளைச் சொல்கிறார். ஆனால், சிந்தனைச்செல்வன் அப்படி ஏதும் கருத்து சொல்லவில்லை.”

திருமா குற்றச்சாட்டும்... ரவிக்குமார் சமாளிப்பும்!
‘தி.மு.க கூட்டணி உடைந்ததற்கு தி.மு.க-தான் காரணம்’, ‘கரூர் கூட்டத்துக்கு விஜய் வருவதற்குத் தாமதமானதால்தான், கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிர்ப்பலி நேர்ந்தது’, ‘முதல்வர் விஜய், ஆட்சியமைக்க அ.தி.மு.க ஆதரவைக் கேட்கவில்லை’ என அண்மையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் அதிரடியாகப் பேசியிருக்கிறார். இந்த நிலையில், வி.சி.க பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான ரவிக்குமாரிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்.
“ `கரூர் சம்பவத்தில் 41 உயிர்ப்பலியானதற்கு விஜய்தான் காரணம்’ என வி.சி.க தலைவர் திருமா சொல்கிறாரே?”
“ஆமாம். இதில் ஒன்றும் ரகசியம் இல்லையே... சம்பவம் நடைபெற்றபோதே வி.சி.க தலைவர் இது குறித்துத் தெரிவித்த கருத்துகளெல்லாம் இப்போதும் சமூக ஊடகங்களில் இருக்கின்றன. எங்களைப்போலவே பலரும் அந்தச் சமயத்தில் இது போன்ற கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இது குறித்தான வழக்கில், விஜய் பெயரை சேர்க்கச் சொல்லி திருமா உள்ளிட்ட பலரும் அப்போதே வலியுறுத்தினர். ஆனாலும்கூட த.வெ.க-வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை வளர்த்துவிட்டுவிட வேண்டாம் என்ற நோக்கில், வழக்கில் விஜய் பெயர் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில், வழக்கை சி.பி.ஐ விசாரிக்கிறது.”
“அப்படியென்றால், ‘கரூர் சம்பவத்தில் குற்றவாளி விஜய்தான்’ என்ற கருத்தில் இப்போதும் வி.சி.க உறுதியாக இருக்கிறதா?”
“கரூர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சி.பி.ஐ விசாரணையில் என்ன உண்மை வெளிவருகிறது என்றும் பார்க்க வேண்டும். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் இந்தச் சமயத்தில், மேலும் இது குறித்துக் கருத்து சொல்வது சரியாக இருக்காது.”
“ ‘ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு, அ.தி.மு.க-வை அணுகவில்லை விஜய். எனவே அவர் ஆர்.எஸ்.எஸ் ஆளாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன்’ என்றெல்லாம் திருமா பேசுவது எதனால்?”
“அ.தி.மு.க ஆதரவை த.வெ.க ஏற்கெனவே கேட்டிருந்தால், முதன்முதலில் காங்கிரஸ் ஆதரவு கொடுத்தபோதே, ‘உங்கள் ஆதரவு எண்ணிக்கை எங்களுக்குப் போதாது. எனவே, உங்கள் ஆதரவு தேவையில்லை’ என்று அவர்கள் சொல்லியிருப்பார்கள். ஆக, த.வெ.க-வினருக்கு அ.தி.மு.க ஆதரவைக் கேட்பதில் தயக்கம் இருந்திருக்கிறது. மேலும், அ.தி.மு.க-விடம் ஆதரவு கேட்டு, அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை த.வெ.க-வினர் சந்தித்துப் பேசியதாக எந்தச் செய்தியும் இல்லையே...”
“த.வெ.க ஆட்சிக்கு ஆதரவாக, சட்டமன்றத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் வாக்களித்திருக் கிறார்கள். முன்னதாக அவர்களை முதல்வர் விஜய்யும் நேரில் போய் சந்தித்திருக்கிறார்தானே... அப்படியென்றால் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அ.தி.மு.க இல்லையா?”
“சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை முதல்வர் விஜய் போய்ப் பார்த்ததாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது தெரியாது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் த.வெ.க ஆதரவு கேட்டதாகச் செய்தி எதுவும் இல்லை. அ.தி.மு.க-விலுள்ள சிலர், சுய விருப்பத்தின் பேரில், த.வெ.க ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம். ஆனால், ‘மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவுதான் வேண்டும்’ என்பதில் த.வெ.க உறுதியான முடிவில் இருந்தது. அதனால்தான், பா.ஜ.க எதிர்க்கும் என்று தெரிந்திருந்தும், `காங்கிரஸ் ஆதரவுடன் த.வெ.க ஆட்சி’ என்ற மிகப்பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறது.”
“ ‘தி.மு.க கூட்டணிக்குத் துரோகம் செய்துவிட்டோம்’ என்ற உணர்வு கட்சியினரிடம் இருப்பதால்தான், ‘யாரும் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம்’ என்கிறாரா திருமா?”
“ ‘கூட்டணிக்குத் துரோகம் செய்துவிட்டனர்்’ என்று தி.மு.க தரப்பிலிருந்து தொடர்ச்சியாகச் சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டுவருகின்றன. இதனால், ‘என்னண்ணே இப்படிச் சொல்கிறார்கள்... இது குறித்து ஒரு விளக்கம் சொல்லுங்கள்’ என வி.சி.க தொண்டர்களேகூட கோரிக்கை வைக்கிறார்கள். எனவேதான் ‘அப்படி யாரும் குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், கூட்டணிக்கு நாம் துரோகம் செய்யவில்லை’ என்பதைச் சொல்லியிருக்கிறார் தலைவர்.”
“சிந்தனைச்செல்வன், ஆளூர் ஷாநவாஸ் போன்ற மாநில நிர்வாகிகளே, சமூக ஊடகங்களில் தொடர்ந்து தி.மு.க ஆதரவுக் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்தானே?”
“ஆளூர் ஷாநவாஸ் அப்படிச் சில கருத்துகளைச் சொல்கிறார். ஆனால், சிந்தனைச்செல்வன் அப்படி ஏதும் கருத்து சொல்லவில்லை.”
“ ‘தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து பதிலளிக்க வேண்டிய முதல்வர் விஜய், மிசா குறித்துப் பேசி திசை திருப்புகிறார். இது குறித்துக் கேள்வி எழுப்பவேண்டிய திருமாவளவனும், கூட்டணி சர்ச்சையைப் பேசி அரசியலை திசை மாற்றுகிறார்’ என்கிறார்களே?”
“தமிழக சட்டம் - ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவது ஜனநாயகம், அது கடமை. ஆனால், நாங்கள் அது குறித்துப் பேசாமல், மடை மாற்ற அரசியல் செய்வதாகச் சொல்வதை ஏற்க முடியாது. ஏனெனில், எங்கள் கட்சியைப் பற்றிய குற்றச்சாட்டுகளுக்குத்தான் எங்கள் தலைவர் தொடர்ந்து பதிலளித்துவருகிறார்.”
