சட்டவிரோத தங்கச் சுரங்கம்; அநியாமாகப் பறிபோன உயிர்கள்

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து ஏராளமானோர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில், ஏராளமான தங்கச் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலானவை சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மேற்கு கோர்டோஃபான் பிராந்தியத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த சுரங்கத்தில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கத் தாதுக்களை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இடிபாடு ஏற்பட்டது. இதில், 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில், இதுவரை 60-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில், சூடான் அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. எனினும், நாட்டின் பெரும்பாலான சுரங்கங்கள், முறையான அனுமதி அல்லது பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இல்லாத சூழலில் தங்க உற்பத்தி செய்துவருகின்றன. இதனால், அங்கு அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிர் இழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
