அகலப்பாதையில் கூடுதல் ரயில்கள்: கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு
உடுமலை: 'மீட்டர்கேஜ்' தண்டவாள காலத்தில் மக்களுக்கு பயனளித்த ரயில் சேவைகளை, அகலப்பாதையிலும் மீண்டும் உடுமலை வழியாக இயக்க, விரைவில் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உடுமலையில் ரயில் பயணிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் மோகன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
நிர்வாகிகள் பேசியதாவது: கோவை - பொள்ளாச்சி - பழநி - திண்டுக்கல் வழித்தடம், கோவை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையிலான முக்கியமான ரயில் இணைப்பாக உள்ளது. மக்களின் தேவைக்கேற்ப போதுமான ரயில் சேவைகள் இல்லாத நிலை தொடர்கிறது.
பகல் நேரத்தில் பழநி மற்றும் உடுமலை பகுதிகளில் இருந்து கோவைக்கு போதுமான ரயில் வசதி இல்லாததால், கல்வி, மருத்துவம், வேலை, தொழில் மற்றும் வணிகத்தேவைகளுக்காக கோவை செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர்.
கோவை - திண்டுக்கல் வழித்தடம், மீட்டர் கேஜ் காலத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்தது. பின்னர் இந்த வழித்தடம் அகலப்பாதையாக மாற்றப்பட்டது. ஆனால் முன்பு இருந்த பயணியர் ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை.
எனவே, மேட்டுப்பாளையம் - காரைக்கால் விரைவு ரயில், மேட்டுப்பாளையம் - ராமேஸ்வரம் தினசரி ரயில் உள்ளிட்ட, உடுமலை மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.
இவ்வாறு, நிர்வாகிகள் பேசினர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, விரைவில் கையெழுத்து இயக்கம் தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டுறவு சங்க அணி மாநில ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி, பி.ஏ.பி., விவசாயிகள் நலச் சங்க பொருளாளர் விஜயசேகரன், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.