Politics
திருச்செந்துாரில் திருமாவளவன் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்

துாத்துக்குடி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முன்னிலையில், அவரது கட்சியினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் நேற்று முன்தினம் இரவு, அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை திருமாவளவன் பார்வையிடச் சென்றார்.
கட்சி நிர்வாகிகளிடையே கோஷ்டி பூசல் நிலவுவதால், அந்த சிலை திறக்கப்படாமல் இருப்பது தெரிய வந்தது.
இந்த விவகாரத்தில், திருமாவளவன் முன்னிலையிலேயே இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருமாவளவன் காரில் இருந்தபடியே அவர்களை சமரசம் செய்ய முயன்றார். ஆனால், திடீரென இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அதிர்ச்சியடைந்த திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இரு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, வி.சி.க., நிர்வாகிகள் கூறியதாவது:
வி.சி.க., முன்னாள் நிர்வாகி முரசு தமிழப்பன் ஏற்பாட்டில், 'தாய் மண் அறக்கட்டளை' என்ற பெயரில், நான்கு ஆண்டுகளுக்கு முன் இடம் வாங்கி, அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில், முரசு தமிழப்பன் சுயேச்சையாக போட்டியிட முயன்றதால், கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து, அந்த இடத்தை 'அம்பேத்கர் நினைவு அறக்கட்டளை' என்ற பெயருக்கு மாற்ற, தற்போதைய மாவட்டச் செயலர் விடுதலை செழியன் முயன்றார்.
இது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை நிலவுகிறது. மேலும், சிலை அமைந்துள்ள இடத்தைச் சுற்றி, 20 சென்ட் அளவுக்கு அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.