வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பட்டம் இதழ் வழங்கப்படுகிறது: கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா பாராட்டு

கள்ளக்குறிச்சி: 'தினமலர் நாளிதழ்' வாசிப்பு பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக 'பட்டம் இதழை' வழங்குகிறது என கலெக்டர் பேசினார்.
தியாகதுருகம் மவுண்ட்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர் - பட்டம் இதழ்' சார்பில் நடந்த வினாடி-வினா போட்டியில் கலெக்டர் பத்மஜா பேசியதாவது: பொதுஅறிவு சார்ந்த தகவல்கள் மற்றும் புத்தகத்தில் உள்ள குறிப்புகளை எடுத்து வாரத்திற்கு 5 நாட்கள் 'பட்டம் இதழ்' மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இது பெரிய வாய்ப்பு. பாடபுத்தகத்தில் உள்ள தகவல்களை மட்டும் மனப்பாடம் செய்தால் தேர்வில் தேர்ச்சி பெறலாம். ஆனால், கருத்தியல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் நமக்கு தெரியாமல் போகும். இந்த தகவல்களை புத்தகத்தில் படித்தாலும் மாணவர்களுக்கு ஆர்வம் இருக்காது. ஆனால், 'தினமலர் நாளிதழ்' மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வடிவமைப்பில் அதை மாற்றி படிக்க வைக்கிறார்கள். வாசிப்பு பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்.
படிப்பதற்கும், கற்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. பட்டம் இதழை கவனமாக உள்வாங்கி படிக்க வேண்டும் என்பதற்காக வினாடி - வினா போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் அடுத்தடுத்த கட்டமாக நடைபெறும் போட்டிகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். போட்டி நிறைந்த இந்த உலகில் தைரியமாக நாம் போட்டியிட வேண்டும். வாழ்க்கையில் என்ன சாதிக்கபோகிறோம் என்பதை முடிவு செய்ய இது சரியான நேரம்.
தினசரி வெளியாகும் செய்திதாளில் மாநில மற்றும் தேசிய அளவிலான நிகழ்வுகள் இடம் பெறும். நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம் என்பதால் மாணவர்கள் தினமும் செய்திதாளை படிக்க வேண்டும். இதை சரியாக செய்தால் எதிர்காலத்தில் என்ன சாதிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.
உங்களது திறமைகளை வெளிப்படுத்திக்கொள்ள இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். போட்டியில் பங்கேற்காத மாணவர்கள் கவனமுடன் படித்த அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் பங்கேற்கலாம். வினாடி - வினா போட்டி நடத்தும் தினமலர் நாளிதழுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு கலெக்டர் பத்மஜா பேசினார்.