நீலகிரி வன தெய்வ கோவில்களில் பாரம்பரிய வழிபாடு..! திரளான பக்தர்கள் தரிசனம்..!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வன தெய்வ கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் எராளமான பக்தர்கள கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வன தெய்வ கோவில்களில் அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மசினகுடி, பொக்காபுரம், மாயார், சொக்கநல்லி, சிரியூர் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள இந்தக் கோவில்களில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான மசினகுடி, பொக்காபுரம், மாயார், சொக்கநல்லி, சிரியூர் ஆகிய இடங்களில் பெண் தெய்வங்கள் காவல் தெய்வங்களாக விளங்குகின்றன. இந்த வனக் கோவில்களில் ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாக்கள் நடத்தப்பட்டாலும், அமாவாசை தினங்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது வழக்கம்.
இன்றைய தினம் சிரியூர் ஆயிரம் கண் மாரியம்மன் கோவில், மசினகுடி மாரியம்மன் கோவில், பொக்காபுரம் மாரியம்மன் கோவில், சொக்கநல்லி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் ஏராளமான பொதுமக்கள் அம்மனை வழிபட்டு பிரார்த்தனை செய்தனர்.
வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்தக் கோவில்களுக்கு வனத்துறையினரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. வனவிலங்குகள் உலாவும் சாலைகள் வழியாக வாகனங்கள் ஊர்ந்து சென்று பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
அடர் வனப்பகுதியில் உள்ள கோவில்கள் என்பதால், இங்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிரியூர் கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், தங்கள் முன்னோர்கள் காலத்தில் இருந்து சுமார் நூறாண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமான முறையில் இந்தக் கோவிலை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவதாகவும், சாதாரணமாக அமாவாசை தினங்களில் குறைந்தபட்சம் ஆயிரம் பேர் வந்து செல்வதாகவும் குறிப்பிட்டனர். ஆடி அமாவாசை போன்ற முக்கியமான நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றும், வனப் பகுதிகளில் பயணம் செய்ய வேண்டி உள்ளதால் பக்தர்கள் பாதுகாப்பான முறையில் விழிப்புணர்வுடன் வந்து செல்ல வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
