Lifestyle and human interest
கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ., உறுதி
சித்தாமூர்:கொளத்தூர் கிராமத்தில் செயல்படும் கல்குவாரிக்களை ஆய்வு செய்து, விதிமீறல்கள் இருந்தால் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., உறுதி அளித்துள்ளார்.
சித்தாமூர் அருகே கொளத்துார் கிராமத்தில், இயங்கும் இரண்டு கல்குவாரிகளால், நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தவிர, பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடிகளால் விவசாயக் கிணறுகள் மற்றும் வீடுகள் சேதமடைந்து கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதே பகுதியில் மேலும் ஒரு கல்குவாரி அமைக்க, தனியார் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணித்தனர். பின் சாலை மறியலில் ஈடுபட்டு புதிய கல்குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது என அதிகாரிகளிடம் தெ ரிவித்தனர். ஏற்கனவே இயங்கும் கல்குவாரிகளில் விதிமீறல்கள் நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில் கொளத்துார் கிராமத்திற்கு வந்த மதுராந்தகம் ஆர்.டி.ஓ., நரேந்திரன், நேற்று மக்களிடம் சமாதான பேச்சு நடத்தினார். அப்போது 'கல்குவாரிகளில் ஆய்வு செய்து, விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்துள்ளார்.