Lifestyle and human interest
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 2ம் நாளாக மக்கள் போராட்டம்

சித்தாமூர்: கொளத்தூர் கிராமத்தில் புதிதாக அமையவுள்ள கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், ஏற்கனவே செயல்படும் கல்குவாரிக்கு குடியிருப்பு பகுதி வழியாக வந்து செல்லும் லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்கள் இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சித்தாமூர் அருகே கொளத்துார் கிராமத்தில், 8.20 ஏக்கர் பரப்பளவில் புதிய கல்குவாரி அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக, கல்குவாரி அமையவுள்ள பகுதி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு, சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த கூட்டம், மதுராந்தகம் ஆர்.டி.ஓ., நரேந்திரன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் முன்னிலையில் நடக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின.
நேற்று முன்தினம் கருத்து கேட்பு கூட்டம் நடக்க இருந்த பகுதிக்கு வந்த கிராம மக்கள், கொளத்துார் பகுதியில் ஏற்கனவே இரண்டு கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மதுராந்தகம் – வெண்ணாங்குப்பட்டு நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று, புதிதாக அமையவுள்ள கல்குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது.
ஏற்கனவே செயல்படும் கல்குவாரி லாரிகள், கொளத்துார் குடியிருப்பு பகுதி வழியாக செல்லக்கூடாது என, கொளத்துார் சாலையில் பந்தல் அமைத்து, கண்களில் கருப்பு துணி கட்டி, சாலை நடுவே சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.