Lifestyle and human interest
அரசு பஸ்சில் மாணவர்கள் அடாவடி :போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் படியில் தொங்கியபடி மாணவர்கள் அடாவடியில் ஈடுபட்ட நிலையில், அரசு பஸ்சை போலீஸ் ஸ்டேஷன் எதிரில் டிரைவர் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டியில் இருந்து விழுப்புரத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று மதியம் வந்தது. விழுப்புரம் பானாம்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது அரசு கல்லுாரி மாணவர்கள் சிலர் ஏறினர்.
அந்த மாணவர்கள் படியில் நின்றதால், பஸ்சின் தானியங்கி கதவுகள் மூடுவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், மாணவர்களை பஸ்சிற்குள் வருமாறு, டிரைவர் மற்றும் கண்டக்டர் கூறினர். ஆனால், மாணவர்கள் ஒத்துழைப்பு கொடுக்காமல் அடாவடியாக இருந்தனர்.
இதனால், பஸ்சை விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எதிரில் சாலையில் நிறுத்திவிட்டு, டிரைவர் மற்றும் கண்டக்டர் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, அங்கு வந்த போலீசார் மாணவர்களை பஸ்சிற்குள் செல்ல அறிவுறுத்தினர். தொடர்ந்து, தானியங்கி கதவுகள் மூடப்பட்டு, அங்கிருந்து அரசு பஸ் புறப்பட்டு சென்றது.