Sport
முதல்வர் கோப்பை கோ - கோ விருகம்பாக்கம் பள்ளி முதலிடம்
சென்னை: மாவட்ட அளவிலான கோ - கோ போட்டியில், விருகம்பாக்கம் ஆவிச்சி அரசு உதவி பெறும் பள்ளி முதலிடம் பெற்றது.
சென்னை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான ஆடவர் கோ - கோ போட்டி, கீழ்ப்பாக்கம், செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 32 அணிகள் விளையாடின.
காலிறுதியில், கீழ்பாக்கம் பள்ளியின் 'பி' அணியை எதிர்கொண்ட விருகம்பாக்கம் ஆவிச்சி அரசு உதவி பெறும் பள்ளி 'ஏ' அணி, 18 - 6 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
தொடர்ந்து நடந்த அரையிறுதியில், ராயபுரம் பி.ஏ.கே., பழனிசாமி பள்ளி அணியை, 18-4 என்ற கணக்கில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப்போட்டியில், ஆவிச்சி பள்ளி, முகப்பேர் வேலம்மாள் பள்ளி அணியுடன் மோதியது. தொடக்கம் முதலே இரு அணிகளும் புள்ளிகளை குவித்து, ஆட்டத்தை விறுவிறுப்பாக்கின. இதில் ஆவிச்சி பள்ளி வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தனர்.
முடிவில், 18-10 என்ற புள்ளிக்கணக்கில் வேலம்மாள் பள்ளியை வீழ்த்திய ஆவிச்சி பள்ளி 'ஏ' அணி, முதல்வர் கோப்பையை பெற்று சென்னை மாவட்ட சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.