Politics
தாமதமாகும் திட்டங்கள்: தாங்குமா தமிழ்நாடு?-விளாசும் வழக்கறிஞர் துரை அருண்

திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளைத் தமிழகமே கொண்டாடும் வேளையில், தற்போதைய முதலமைச்சரின் செயல்பாடுகள் அண்ணாவின் கொள்கைகளுக்கும் திராவிட விழுமியங்களுக்கும் எதிராக அமைந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அண்ணாவைத் தனது கொள்கைத் தலைவர் என்று கூறிக்கொண்டு, அவரது பிறந்தநாளில் அறிவிக்கப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்களை முடக்குவது ஏன் என்ற கேள்வியும், விவாதமும் எழுந்துள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் துரை அருண் நக்கீரன் டிவிக்கு கொடுத்த நேர்காணலில் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது,"செப்டம்பர் 15 என்பது உலக ஜனநாயக நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட ஒரு உன்னதமான நாள். அதே நாளில் தான் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஜனநாயகம் பற்றி உரக்கப் பேசிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளும் வருகிறது. தன்னை ஒரு 'ஜனநாயகன்' என்று காட்டி, அந்தப் பெயரிலேயே படமும் நடித்த தற்போதைய முதலமைச்சர் விஜய், அண்ணாவின் பிறந்தநாளுக்கு லண்டனிலிருந்து ஒரு வாழ்த்துச் செய்தி கூடப் போடவில்லை; அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தவும் இல்லை.
அர்ஜுனா போன்ற அமைச்சர்கள் வாழ்த்துச் சொல்வது முதலமைச்சர் சொல்வதற்கு ஈடாகாது .இதனை விடப் பெரிய கொடுமை என்னவென்றால், செப்டம்பர் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய தாய்மார்களுக்கு 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' நடைமுறைப்படுத்தப்படும் என்று இவர்களே அறிவித்திருந்தார்கள். ஆனால், அந்தத் திட்டத்தைத் தொடங்காமல் திடீரென ஒத்திவைத்து முடக்கியுள்ளனர். மேலும், செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கப்பட வேண்டிய காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தையும் கிடப்பில் போட்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி, இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மாநிலக் கட்சியைத் தனித்து ஆட்சிப் பீடத்தில் அமரச் செய்த அண்ணாவின் சாதனைகளோடு இன்றைய முதலமைச்சரை ஒப்பிடவே முடியாது. அண்ணா என்பவர் தமிழை கரைத்துக் குடித்தவர்; சங்க இலக்கியங்கள் முதல் தொல்காப்பியம் வரை அத்தனையையும் கற்றறிந்த மேதை; ஆங்கிலத்திலும் ஆற்றலோடு பேசக்கூடியவர்.
ஆனால் இன்றைய முதலமைச்சரோ, நீதிமன்றத்தில் வாய்தா வாங்குவது போல பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்லத் தெரியாமல் மூன்று நாள் டைம் கேட்டு ஓடுகிறார். கேட்ட கேள்விக்குச் சம்பந்தமில்லாமல் சர்க்காரியா கமிஷனைப் பற்றிப் பேசுகிறார். அரசியல் அனுபவமே இல்லாத இவர்களைப் போய் அண்ணாவோடு ஒப்பிடுவது ஒரிஜினலையும் டூப்ளிகேட்டையும் ஒன்றாகப் பார்ப்பது போன்றதாகும். லண்டனில் அஜித் ஓட்டிய காரைத் தொட்டுப் பார்க்கக்கூட ரசிகர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், அந்த காரின் பேடில் ஏறி உட்கார்ந்து கொண்டு கார் பந்தயத்தை முதலமைச்சர் கொடியசைத்துத் தொடக்கி வைப்பது என்ன பெரிய உலக சாதனை? மக்கள் நலத்திட்டங்களை ஒத்திவைத்துவிட்டு வெளிநாட்டில் உல்லாசம் காண்பது அண்ணாவின் கொள்கைகளுக்குச் செய்யும் துரோகமாகும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)